கடலூர், தூத்துக்குடியில் புதிய தொழிற்பேட்டைகள்: குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் 27 அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி மற்றும் மதுரையில் வணிக மற்றும் ஏற்றுமதி வசதி மையங்கள் ரூ.10 கோடி செலவில் நிறுவப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கடலூர், தூத்துக்குடியில் புதிய தொழிற்பேட்டைகள் அமைத்தல், கோவை, ஈரோடு, கரூர், விருதுநகரில் பொது வசதி மையங்கள் அமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 27 முக்கிய அறிவிப்புகள்:

> கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரில் சுமார் 29 ஏக்கரில் ரூ.13 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

> தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டியில் சுமார் 54 ஏக்கரில் ரூ.25 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

> கடலூர் மாவட்டம் மதவேடு கிராமத்தில், 11.41 ஏக்கரில் ரூ.4.70 கோடி திட்ட மதிப்பில் ரூ.3.50 கோடி தமிழக அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

> விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைசெய்யும் மகளிர் நெசவு குறுங்குழுமத்திற்கான ஒரு பொது வசதி மையம் ரூ.3.75 கோடி தமிழக அரசு மானியத்துடன் அமைக்கப்படும்.

> கோயம்புத்தூர் மாவட்டம் சின்னவேடம்பட்டியில் அலுமினியம் அச்சு வார்ப்பு செய்யும் குறுங்குழுமத்திற்கான ஒரு பொது வசதி மையம் ரூ.5.80 கோடி தமிழக அரசின் மானியத்துடன் அமைக்கப்படும்.

> கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பீங்கான் மின்காப்பு உபகரணங்கள் செய்யும் குறுங்குழுமத்திற்கான ஒரு பொது வசதி மையம் ரூ.2.80 கோடி தமிழக அரசின் மானியத்துடன் அமைக்கப்படும்.

> ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் மஞ்சள் தூள் உற்பத்தி செய்யும் குறுங்குழுமத்திறான ஒரு பொது வசதி மையம் ரூ.3.50 கோடி தமிழக அரசின் மானியத்துடன் அமைக்கப்படும்.

> ஈரோடு மாவட்டம் பவானியில் ஜமுக்காளம் உற்பத்தியாளர்களுக்கென ஒரு பொது வசதி மையம் ரூ.3.50 கோடி தமிழக அரசின் மானியத்துடன் அமைக்கப்படும்.

> திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்தில் ரூ.10 கோடி தமிழக அரசு பங்களிப்புடன் ரூ.16 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒரு கயிறு குழும பொது வசதி மையம் நிறுவப்படும்.

> கரூர் மாவட்டம் க.பரமத்தி வட்டாரத்தில் ரூ.5 கோடி தமிழக அரசு பங்களிப்புடன் ரூ.6.93 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒரு கயிரு குழும பொது வசதி மையம் நிறுவப்படும்.

> திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்தில் ரூ.2.25 கோடி அரசு மானியத்துடன் ரூ.2.50 கோடி மதிப்பில் ஒரு ஊதுபத்தி குறுந்தொழில் குழுமம் அமைக்கப்படும்.

> கன்னியாகுமரி மர சிற்பம் செதுக்குவோர் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பொது வசதி மையம் அரசு மானியத்துடன் அமைக்கப்படும்.

> கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த தொழில்முனைவோர் பயனடையும் வகையில் தொழில்முனைவோர் கரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் (Covid Assistance Relief to Entrepreneurs CARE) என்கின்ற புதிய திட்டம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும்.

> கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி மற்றும் மதுரையில் வணிக மற்றும் ஏற்றுமதி வசதி மையங்கள் ரூ.10 கோடி செலவில் நிறுவப்படும்.

> தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களை எளிதாக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs)துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் பங்கு பெற அனுமதிக்கப்படும்.

> வேதிப்பொருள் கலப்படமில்லா ஜவ்வரிசி மற்றும் ஜவ்வரிசி சார்ந்த பிற உணவுப் பொருட்களுக்கான வர்த்தக முத்திரைப் பதிவு செய்யப்படும்.

> வேதிப்பொருட்கள் கலப்படமில்லா ஜவ்வரிசிக்கு வணிக அடையாள குறியீடு பெறுவதற்கு ஏதுவாக ரூ.4 கோடி செலவில் சேகோசர்வ் ஆய்வகம் மேம்படுத்தப்படும்.

> காக்களூர் மத்திய மின்பொருள் சோதனைக் கூடத்தின் சோதனை வசதிகள் ரூ.1.32 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

> குன்னூர் இண்ட்கோசர்வ் நிறுவனத்தில் அதிநவீன தேயிலை கலப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பேக்கேஜிங் பிரிவு ரூ.3.90 கோடி செலவில் அமைக்கப்படும்.

> 2022-23 ஆம் நிதி ஆண்டிலிருந்து 100 புத்தொழில் நிறுவனங்களுக்கு (Startups) முடுக்க உதவியுடன் ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும்.

> திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் வள்ளியூர் கிராமத்தில் உள்ள 3.06 ஏக்கர் டான்சி நிலத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் டான்சிட்கோ கூட்டு முயற்சியில் உடனடியாக பயன்படத்தக்க தொழிற்கூடங்கள் உருவாக்கப்படும்.

> ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு இந்த ஆண்டு முதல் மாநில அளவிலான சிறந்த தொழில்முனைவோர் விருது வழங்கப்படும்.

> பள்ளி மாணவர்களிடையே புத்தாக்க மனநிலை விதைத்திடும் வகையில் 1560 பள்ளிகளில் 1.5 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> தொழில்முனைவோர்கள் அறிவுசார் சொத்து உரிமை (IPR) பெறுவதற்கான குறைந்தபட்ச மானியம் ரூபாய் ஒரு லட்சம் என வழங்கப்படும்.

> தொழில் தொடங்குபவர்களுக்கு வணிக வசதி வேலைகளை வட்டார அளவில் எளிதில் வழங்குவதற்கு ஏதுவாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையானது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் வட்டார வள மையங்களுன் இணைந்து செயல்படும்.

> குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு (PLF), விழிப்புணர்வு மற்றும் பயிற்சி EDII மூலம் வழங்கப்படும்.

> 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள 20 குறுந்தொழில் குழுமங்களைச் சார்ந்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தொழில்முறை கணக்கியல், வரி ஆலோசனை, வரி தாக்கல் செய்தல் மற்றும் நிறுவன செயலக சேவை ஆகிய சேவைகளை முதல் 5 ஆண்டுகளுக்கு அரசு இலவசமாக வழங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE