'ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு வழங்கியது காவல் துறை' - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக காவல் துறை அழைத்துச் சென்றிருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது" என்று ஆளுநர் வாகனம் மீதான தாக்குதல் குறித்து சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை - தருமபுரத்தில் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. ஆளுநர் வாகனம் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பின்னர், ஆளுநருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: "இன்று நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி, ஒரு முக்கியமான பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர், அதேபோல, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், சட்டமன்ற பாஜக தலைவர் ஆகியோர் இங்கே உரையாற்றியிருக்கின்றனர்.

அதாவது, நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி அரசிடம் கேள்வியைக் கேட்கின்றபோது, அதற்குரிய பதிலை அவர்கள் பொறுமையாக இருந்து கேட்டு, அதிலே அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னால், வெளிநடப்பு செய்யட்டும்; நான் வேண்டாமென்று சொல்லவில்லை. அதுதான் மரபு. ஆனால், அவர்களுக்கே தெரிந்துவிட்டது. இதிலே பதில் சொல்கிறபோது, நாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்று சொல்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதைத்தான் செல்வப் பெருந்தகை மிக விளக்கமாக இங்கே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

ஆளுநர் தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க திருக்கடையூர் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றிருக்கக்கூடிய போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) நேற்றைய தினம் தெளிவாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அதை முழுமையாக நீங்கள் பத்திரிகைகளிலே பார்த்திருக்கலாம்; தொலைக்காட்சிகளிலும் கேட்டிருக்கலாம். இருந்தாலும் காவல் துறையின் கூடுதல் இயக்குநர் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒன்றை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

‘இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர், அவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து, பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை’ என்பதை காவல் துறை கூடுதல் இயக்குநர் மிகத் தெளிவாக, மிக விளக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதேபோல, ADC to the Hon’ble Governor of Tamil Nadu ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். Official-ஆக அவர் காவல்துறை DGP-க்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அதிலே அவர் கடைசியாகக் குறிப்பிட்டிருப்பது, “fortunately, Hon’ble Governor and the convoy passed unarmed”. அதாவது, ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கற்களோ, கொடிகளோ மற்றும் எந்தப் பொருட்களாலும் பாதிக்கப்படாமல் காவல் துறையால் பாதுகாக்கப்பட்டன என்ற செய்தியை ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி, காவல் துறை இயக்குநருக்குக் கடிதம் மூலம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

ஆனால், இதுதான் நமக்கு chance; இதை அரசியலுக்காக நாம் பயன்படுத்திட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இது அரசியல் கட்சிகளுக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய இயல்புதான். பொதுவாக, அதிமுகவிலே இருக்கக்கூடிய அந்த ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு பேரும் திட்டமிட்டு சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள். இங்கேயிருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள். ஆனால், இந்த அறிக்கை மட்டும் தனித்தனியாக வந்தது. அப்பொழுதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதிலே குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் அறிக்கையிலே கடைசியாக, ‘தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காவல் துறையைத் தனது கையில் வைத்திருக்கக்கூடிய முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்’ என்று சொல்லிவிட்டு, இப்போது பதிலைக் கேட்காமலேயே போய்விட்டார். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

அதேபோல, எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர் தனியாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அவர் கடைசியாகச் சொல்வது; இன்னும் soft-ஆகச் சொல்லியிருக்கிறார். ‘மேற்படி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இது நியாயமாக இருக்கிறது.

அங்கே போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநரின் பாதுகாப்பிற்காக மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவராக இருக்கக்கூடிய ஐஜி தலைமையில் இரண்டு டிஐஜிக்கள், 6 எஸ்பிக்கள், 6 கூடுதல் எஸ்பிக்கள், 21 டிஎஸ்பிக்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு, அவருடைய பயணம் பாதுகாப்பாக இருந்தது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

"ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன; கொடிகள் வீசப்பட்டன" என்பது ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்பதுதான் உண்மை.

ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், ஆளுநர் பாதுகாப்பில் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை முறையாக எடுத்திருக்கிறது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பினை அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்பதை நான் உறுதியோடு இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த நிகழ்வை வைத்துக்கொண்டு, ஆளுநரைப் பயன்படுத்தி அரசியல் செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் எண்ணுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், அது நடக்கவே நடக்காது, இது திமுக ஆட்சி. (சாத்தான்குளத்திலே நடைபெற்ற சம்பவம் குறித்து இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறோம். அதேபோல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம். அந்தச் சம்பவத்தைப் பற்றி அன்றைக்கு முதல்வராக இருந்தவரிடம் கேட்டபோது, எனக்குத் தெரியவில்லையே என்று சொன்னார். அப்படிச் சொன்னவர், இன்றைக்கு சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

அதிமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த மறைந்த சென்னா ரெட்டிக்கு என்ன நடந்தது? நான் அதற்குள் அதிகம் போக விரும்பவில்லை. திண்டிவனத்தில் 10-4-1995 அன்று, ஆளுநர் சென்னாரெட்டியும், அவரது கான்வாயும் 15 நிமிடங்களுக்கு மேல் அங்கே மறிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் நடுரோட்டில் நின்றது யாருடைய ஆட்சியில்? அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தலைமையில் சரமாரியாக கல் எறிந்திருக்கிறார்கள்; முட்டையை வீசியிருக்கிறார்கள்; தக்காளியை வீசி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், சென்னா ரெட்டி உயிர் தப்பினார்” என்று அன்றைக்குத் தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வந்தது. இது யாருடைய ஆட்சியில்?

தாக்குதலுக்கு உள்ளான ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என்று இதே அவையில், அதிமுக ஆட்சியில் ஒரு தனித் தீர்மானமே கொண்டு வரப்பட்டது என்று இங்கே செல்வப் பெருந்தகை குறிப்பிட்டுச் சொன்னார். நாவலர் அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து, அது இந்த அவையிலே நிறைவேற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகையால், ‘சென்னாரெட்டி உயிர் தப்பினார்’ என தலைப்புச் செய்தி பத்திரிகைகளில் எல்லாம் வந்தது. தாக்குதலுக்கு உள்ளான ஆளுநர் அவர்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று 26-4-1995 அன்று இதே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது யாருடைய ஆட்சியில்?

ஆளுநர் மட்டுமல்ல; மிகப் பெரிய சட்டப் பதவியில் இருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் மறைந்த டி.என். சேஷன் தாஜ் ஓட்டலிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. அதெல்லாம் அதிமுக ஆட்சியினுடைய சாதனைகள். விமான நிலையத்திலிருந்து விரட்டியடித்து, அவர் சென்னையில் இருக்கக்கூடிய தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு வந்த பிறகு, அந்த ஓட்டலையும் முற்றுகையிட்டு, கல்வீசித் தாக்குதல் நடத்தியது யாருடைய ஆட்சியில்? அவர்கள் ஆட்சியில்தான்.

ஏன்... இன்றைக்கு பாஜகவில் ஒரு முக்கியஸ்தராக இருக்கக்கூடிய டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்த முயன்று, அவரை அசிங்கப்படுத்திய ஆட்சி உங்களுடைய ஆட்சி, அதிமுக ஆட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி; சந்திரலேகா மீது ஆசிட் வீசிய ஆட்சி, யாருடைய ஆட்சி? எல்லாம் அதிமுக ஆட்சியில்தான் நடைபெற்றன.

எனவே, இந்த அரசைப் பொறுத்தவரையில், நான் தெளிவாக, உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைத் தடுத்திருக்கிறது. ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது. அதுமட்டுமல்ல; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசியல் சட்டப் பதவிகளில் இருப்பவர்களைக் காப்பாற்ற, அவர்களுக்குரிய பாதுகாப்பினை அளித்திட, இந்த அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது. அந்தக் கடமையைக் காவல் துறை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, தங்கள் ஆட்சியில் ஆளுநரை கல், முட்டை, தக்காளி என வீசித் தாக்கியதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, நடக்காத ஒன்றை நடந்ததாகக் கற்பனையாக இங்கே கூறி அரசியல் செய்ய வேண்டாம் என்று - இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருந்தாலும், அவர்களுக்கு இந்தச் செய்தி போகும் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சித் தலைவர் ,
எதிர்க்கட்சித் துணைத் தலைவரை நான் மிகுந்த மரியாதையோடும், மதிப்போடும் கேட்டுக் கொள்கிறேன். ஆகவே, இதுகுறித்து இந்த விளக்கமே போதும் என்று கருதி, நான் அமைகிறேன் என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்