சென்னை: வன விலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க மலைகளில் மதுக்கடைகளுக்கு தடைதான் ஒரே வழி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை காட்டுக்குள் வீசுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மாற்றுத் திட்டத்தை வரும் 25-ஆம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும்; இல்லாவிட்டால் மலைப் பகுதிகளில் மதுக்கடைகளை மூட ஆணை பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது ஆகும்.
மலைப் பகுதிகளில் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மது வணிகத்தின் மூலம் லாபம் ஈட்டும் டாஸ்மாக் நிறுவனம், வன உயிரினங்களின் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும் என்றும் கண்டித்தனர். காலி மது பாட்டில்கள் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில் வீசப்படுவதை தடுக்கும் வகையில், மலைப் பகுதிகளில் மட்டும் காலி மதுபாட்டிகளை வாங்குவதற்கு மையங்களைத் திறக்கலாம் என்றும், அந்த மையங்களில் காலி பாட்டில்களை வழங்குவோருக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வீதம் ஊக்கத்தொகை வழங்கலாம் என்றும் யோசனை தெரிவித்த நீதிபதிகள், அதை செயல்படுத்துவது பற்றி 25-ஆம் தேதிக்குள் முடிவெடுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மலைப்பகுதிகளில் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில் காலி மது பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க வேண்டும் என்பதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. ஆனால், அவர்கள் தெரிவித்துள்ள மாற்றுத் திட்டமோ, வேறு எந்த மாற்றுத் திட்டங்களோ வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்காது என்பது தான் எதார்த்தம் ஆகும். காலி மது பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 என்பது கவர்ச்சிகரமான அறிவிப்பாகத் தோன்றலாம்; ஆனால், மது குடித்த பிறகு மனிதர்கள் மனிதர்களாக இருப்பதில்லை. காலி மதுபாட்டில்களை ஒப்படைத்து ரூ.10 பெறலாம் என்ற மனநிலையிலும் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மையாகும். அதிகாரப்பூர்வ விலையை விட ரூ.30 - 40 வரை, குறிப்பாக மலைப் பகுதிகளில் இன்னும் கூடுதல் விலை கொடுத்து மதுவை வாங்குபவர்களுக்கு, அதை திரும்பக் கொடுத்து விட்டு பணம் பெறும் எண்ணம் தோன்றாது.
மது போதை கோழைகளுக்கும் பொய்யான துணிச்சலைக் கொடுக்கிறது; அது மனிதர்களை மிருகமாக மாற்றுகிறது. அதனால், அந்த நேரத்தில் சாகசங்களை செய்து தங்களின் வீரத்தை வெளிப்படுத்துவதற்கு தான் மது குடித்த மனித மிருகங்கள் முயலும். அதனால், மது போதையில் காலி பாட்டில்களை உடைத்து சேதப்படுத்துவதற்கு தான் அவர்கள் துடிப்பார்களே தவிர, வன விலங்குகளுக்கு பாதிப்பைத் தடுக்கும் வகையில் காலி பாட்டில்களை அதற்கான மையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள்.
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் யோசனையை டாஸ்மாக்கிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தெரிவித்ததே நீலகிரி மாவட்ட நிர்வாகம் தான். ஆனால், அந்தத் திட்டம் நடைமுறைக்கு ஏற்றது அல்ல என்று அதே மாவட்ட நிர்வாகம் இப்போது தெரிவித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற வினாவுக்கும் பதில் அளிக்கும் போது இந்த விஷயங்களை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டில் மட்டும் 101 யானைகள் உயிரிழந்துள்ளன. நடப்பாண்டில் மார்ச் 15-ஆம் தேதி வரையிலான 75 நாட்களில் மட்டும் 30 யானைகள் உயிரிழக்கின்றன. கடந்த ஆண்டில் மூன்றரை நாட்களுக்கு ஒரு யானையும், நடப்பாண்டில் இரண்டரை நாட்களுக்கு ஒரு யானையும் உயிரிழக்கின்றன. இவை அனைத்துக்கும் காலி மது பாட்டில்கள் காரணம் அல்ல... வேறு பல காரணங்கள் உள்ளன என்றாலும் கூட, யானைகள் உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதற்காகவே இந்த புள்ளி விவரத்தை தெரிவிக்கிறேன். யானை வரும் பாதையில் ஒரே ஒரு காலி பாட்டில் கிடந்தாலும் கூட, அதை யானை மிதிக்கும் போது அது உடைந்து காலில் குத்தினால், அதன் மூலம் யானைக்கு புண் ஏற்பட்டு சீழ் பிடித்து அடுத்த 3 மாதங்களில் உயிரிழந்து விடுவதாக கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை தொடருவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.
காட்டுப் பகுதிகளில் காலி பாட்டில்கள் வீசப்படுவதை தடுப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் பயனளிக்காது என்ற சூழலில், அந்தப் பகுதிகளில் மதுக்கடைகளை மூடுவது தான் சரியான தீர்வாக இருக்கும். அதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படப்போவதில்லை. அதனால், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும், சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, அப்பகுதிகளுக்கு வெளியிலிருந்து மது பாட்டில்கள் கொண்டு செல்லப்படுவதையும் தமிழக அரசு தடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago