பெயர் மாற்றம் | நவீன பரிசோதனை மையம் ஆக மாறிய 'அம்மா பரிசோதனை மையம்' 

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'அம்மா முழு உடல் பரிசோதனை மையத் திட்டம்' இப்போது 'அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 2018-ம் ஆண்டு அம்மா முழு உடல் பரிசோதனை மையமானது துவக்கிவைக்கப்பட்டது.

'அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக குறைவான செலவில் பல பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதைப்போன்று அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த இரண்டு முழு உடல் பரிசோதனை மையங்களிலும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பரிசோதனை மையத்தில், அம்மா கோல்டு, அம்மா டைமண்ட், அம்மா பிளாட்டினம் என்று 3 வகையான திட்டங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

கூடுதலாக பிளாட்டினம் பிளஸ் என்ற திட்டத்தில் அம்மா பிளாட்டினம் உட்பட நுரையீரல் சார்ந்த பரிசோதனை, விரிவான கண் பரிசோதனை, பார்வைக் குறைபாடு பரிசோதனை, கண் நரம்பு பரிசோதனை, மூச்சாற்றல் அளவி ஆகிய பரிசோதனைகள் ரூ.4,000 செலவில் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில் அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான கருவில் இருக்கும் குழந்தையின் உடல் நலத்தை ஆய்வு செய்யும் அதிநவீன பரிசோதனைக் கருவியை திட்டத்தின் மூலமாக இணைக்கப்பட்டது. இந்நிலையில், 'அம்மா முழு உடல் பரிசோதனை மையம்' என்றிருந்த திட்டத்தின் பெயரை 'அதிநவீன உடல் பரிசோதனைத் திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் உள்ள மையத்தின் பெயர் அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம் என்று மாற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE