'தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பில்லை; சட்டம் ஒழுங்கும் இல்லை' - அதிமுக வெளிநடப்புக்குப் பின்னர் ஈபிஎஸ் பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கை பேண வேண்டிய காவல்துறை அரசின் கைப்பாவையாகிட்டது என்று கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கலை கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு, ஆளுநர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு சில அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆளுநரின் கார் மனம்பந்தல் என்ற இடத்தைக் கடந்தபோது, ஆளுநர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் கார் மீதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசியும், கையில் வைத்திருந்த கம்புகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் அங்கு ஒரு மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆளுநருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர், கூடியிருந்தது தெரிந்திருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், அவர்களை அப்புறப்படுத்தாமல், கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு காவல்துறையே முன்னின்று பாதுகாப்பு அளித்தது மிகவும் வருந்தத்தக்கது, கண்டனத்திற்குரியது. காவல்துறையின் இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் சுற்றுப்பயண விவரத்தை அவரது பாதுகாப்பு அதிகாரி, மாநில உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த 15.4.2022 அன்று தெரிவித்துள்ளார். ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்களின் மீது தகுந்த குற்றவியல் நடைமுறை தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநருக்கு 19.4.2022 அன்று அவர் புகார் கடிதம் எழுதியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளுநரின் சுற்றுப்பயண விவரங்கள் முன்கூட்டியே தெரிந்திருந்தும், காவல்துறை தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் கார் மீது நடைபெற்ற இந்த தாக்குதல்லகள் தமிழக காவல்துறையின் மீது விழுந்த ஒரு கரும்புள்ளியாகும். ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதை முன்கூட்டியே தமிழக உளவுத்துறை ஏன் கவனிக்கவில்லை.

நான் முதல்வராக இருந்தபோது, திமுகவினரும் அவரது கூட்டணி கட்சியினரும் அப்போது இருந்த ஆளுநருக்கு எதிராக பல இடங்களில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போதெல்லாம் ஆளுநருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு முழுமையாக பேணிக் காக்கப்பட்டது. ஆனால் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் காவல்துறை கண்ணெதிரேயே ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தியது திமுக ஆட்சியில் காவல்துறை செயலிழந்து உள்ளதையும், உளவுத்துறை தோல்வியடைந்துள்ளதையும் காட்டுகிறது.

தமிழகத்தில் ஆளுருக்கே பாதுகாப்பு இல்லாதபோது சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து சிதைந்துபோனதை வெளிப்படுகிறது. ஆளுநருக்கு ஏற்பட்ட இந்த நிலை கண்டிக்கத்தக்கது, வருந்ததக்கது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்த தமிழக காவல்துறை இன்று அரசின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதலை திட்டமிட்ட செயலாக மக்கள் பார்க்கின்றனர். இதனைக் கண்டித்து அதிமுக சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE