சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: கொசஸ்தலையாற்றின் கரைகளை மறுசீரமைக்கும் பணி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மற்றும் திருவொற்றியூர் மண்டலங்கள் மற்றும் கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கொசஸ்தலையாற்றின் கரையோரங்களில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரையினை மறுசீரமைக்கும் பணிக்கான முன்னேற்பாடு பணி நடைபெறுகிறது. மணலி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 94.96 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் 7.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இவற்றுடன் கொருக்குப்பேட்டை பகுதியில் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி என அனைத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.20) பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளும் விரைவாக நடைபெற்றன.

வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க முதல்வர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வடகிழக்கு பருவமழையின்போது, கொசஸ்தலையாற்றின் வெள்ளிவாயல் முதல் சடையான்குப்பம் வரை கரைஉடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மணலிபுதுநகர், தனலட்சுமி நகர், வடிவுடையம்மன் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட அப்பகுதிகளை முதல்வர் பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார்.

இப்பகுதிகளில் வெள்ளநீர் சூழாமல், நிரந்தர தீர்வு காணும் வகையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வெள்ளிவாயல் கிராமம் அருகே கொசஸ்தலையாற்றின் வலது கரையில் சுமார் 1000 மீட்டர் வரை அலைக்கற்களுடன் கூடிய கரை அமைக்கும் பணி மற்றும் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், இடையான்சாவடி, சடையான்குப்பம், மணலிபுதுநகர் ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் கொசஸ்தலையாற்றின் 4000 மீட்டர் வரை கரையை பலப்படுத்துல் மற்றும் இடையான்சாவடி அருகே கொசஸ்தலையாற்றின் இடதுகரையில் 2000 மீட்டர் வரை கரையினை மறுசீரமைக்கும் பணி ஆகியவற்றிற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப்பணிகள் தொடங்கப்படவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகளை முதல்வர் இன்று (ஏப்.20) பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ரூ.3220 கோடி மதிப்பீட்டில், 769 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மணலி மண்டலத்திற்குட்பட்ட வார்டு 16-ல் உள்ள வடிவுடையம்மன் நகர் பகுதியில் 51.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15.41 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், 60 அடி சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதியில், 43.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10.45 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் தமிழக முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-4ல் உள்ள மணலி விரைவு நெடுஞ்சாலையில் 7.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 0.81 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மழைநீர் வடிகால் கார்கில் நகர் குளத்தினை சென்றடையும். இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்திட முதல்வர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது கொருக்குப்பேட்டை, கண்ணன் தெரு, தீயப்பா தெரு, ஏகாம்பரம் தெருவில் மழைநீர் தேங்கி, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வரும் மழை காலத்தில் மழைநீர் தேக்கத்தை தவிர்க்கும் பொருட்டு கண்ணன் தெரு, தீயப்பா தெரு, ஏகாம்பரம் தெருவில், 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1.23 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேற்கண்ட பணிகள் அனைத்தும் நிறைவுபெறும்போது, இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டு, கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் வசிக்கும் 30 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சுதர்சனம், கே.பி. சங்கர், ஜே.ஜே.எபினேசர், துரை சந்திரசேகர், துணை மேயர் மு. மகேஷ் குமார், அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்