அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகத்தின் பங்கு 4 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: நாட்டின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகத்தின் பங்கு 4 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கனிம வளங்கள் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித்துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். அப்போது தொழில் துறையில் முதலீடுகள் குறித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், "தொழில் முதலீட்டாளர்களைச் சந்திக்க, தொழில் துறை முன்னேற்றத்திற்காக நான் வெளிநாடு சென்று வந்த காரணத்தினால், அதிலே எனக்கும் பங்கு உண்டு என்ற அந்த உணர்வோடு சில விளக்கங்களை இந்த அவைக்கு நான் எடுத்து வைக்க விரும்புகிறேன். தொழில் துறையைப் பொறுத்தவரையில், தமிழகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலே எந்த மாற்றமும் கிடையாது. இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து, புதிய அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்காக, புதிய முதலீடுகளைப் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டு வருகின்றன.

ஆட்சிக்கு வந்து பத்தே மாதங்களில், 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல; உறுப்பினர் பேசும்போது சொன்னார்; ‘MoU போட்டவுடனே, அடுத்த நிமிடமே, அடுத்த மாதமே தொழிற்சாலை வந்துவிடும்; வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் என்று நான் சொல்லவில்லை. படிப்படியாகத்தான் அவையெல்லாம் வரும்’ என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆகவே, அதில் உறுதி செய்யப்பட்டிருக்கிற முதலீடுகளைக் கொண்டு வருவதுதான் மிக மிக முக்கியம்.

அந்த வகையில், இந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள் வந்திருக்கின்றன; புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன; புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தொழில் வளர்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல், தமிழகம் முழுமைக்கும் அது சென்றாக வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இந்த அரசு தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின், "வளர்ச்சி குறைந்த மாவட்டங்களுக்கும்" அதனுடைய வளர்ச்சி, பயன்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

ஆங்கில நாளேடான இந்து பத்திரிகை, 'அந்நிய முதலீடுகளை ஈர்க்கக்கூடிய தமிழ்நாடு' என்று பாராட்டி எழுதியிருக்கிறது. அதுமட்டுமல்ல; மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனமே, "2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான" காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 41.5 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்று புள்ளிவிவரத்தையும் வெளியிட்டிருக்கிறது.

தேசிய அளவில் பார்த்தீர்களென்றால், 16 விழுக்காடு வீழ்ச்சியைச் சந்தித்த அதே காலகட்டத்தில், தமிழகம் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பது மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய, பெருமைப்படத்தக்க ஒரு செய்தியாகும். நாட்டின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகத்தின் பங்கு 4 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

தமிழக அரசின் தொழில் துறை வழிகாட்டி நிறுவனமாக இருக்கக்கூடிய Guidance Tamil Nadu 'ஆசிய ஓசியானியா' பகுதியில் சிறந்த தொழில் முதலீடு ஊக்குவிப்பு முகமை என்ற சர்வதேச விருதினைப் பெற்றிருக்கிறது. அதற்காக அமெரிக்க தூதரகமே இந்த அரசைப் பாராட்டியிருக்கிறது. தமிழகத்தை தொழில் முதலீட்டாளர்களின் முக்கிய மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கக்கூடிய தொழில் துறைக்கு, குறிப்பாக, இந்தத் தொழில் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவிற்கும், அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தொழில் துறை அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த, பாராட்டை, வாழ்த்துக்களை இந்த அவையின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய தலைமையில் இயங்கக்கூடிய இந்தத் தொழில் துறை Team, நிச்சயமாக, உறுதியாக தமிழகத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தொழில் வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டுமென்று உறுப்பினர் சொன்னார். எனவே, சட்டம் ஒழுங்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருப்பதற்கு தொழில் வளர்ச்சி நிச்சயமாகத் தேவைப்படுகிறது. அதை மனதில் வைத்துதான் தொழில் துறை வளர்ச்சிக்கு, நானும், இந்தத் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய அமைச்சரும், அவருக்குக் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்தத் துறை அதிகாரிகளும் அதற்காகத் தொடரந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

உழைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல; இந்த அவையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல், நீங்களும் அதற்கான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடிய வகையில் முன்வர வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டுக் கொண்டு, சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தொழில் துறைக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்