'கல்வி மட்டும்தான் திருட முடியாத சொத்து' - தமிழக முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: "ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக அமையும். திருட முடியாத ஒரு சொத்து இருக்குமென்றால், அது உங்களுடைய கல்வி மட்டும்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறு கட்டமைப்பு திட்டத்தின் தொடக்க விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் இன்று காலை நடந்தது. இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், " ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடமிருந்து யாராலும் அதைப் பிரிக்க முடியாது. திருட முடியாத ஒரு சொத்து இருக்குமென்றால், அது உங்களுடைய கல்வி மட்டும்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

அதனால்தான் பள்ளிக்கல்விக்கு இந்த அரசு, மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனை மிக மிக வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள் அந்தளவுக்கு இந்த அரசு கல்விக்கு முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய மூவரின் சிந்தனையும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால்தான், கல்வி எனும் நீரோடை மிகச் சீராக செல்லமுடியும். அதில் எவர் ஒருவர் தடங்கல் போட்டாலும் கல்வியானது தடம்புரளும். உலகப்புகழ் பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரானின் வரிகளைத் தான் இங்கிருக்கக்கூடிய பெற்றோர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

"உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள், வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை, அவர்களுக்கு நீங்கள் உங்கள் அன்பைத் தரலாம், சிந்தனையை அல்ல, அவர்களுக்கென அழகான சிந்தனைகள் உண்டு, நீங்கள் அவர்களைப் போல் ஆவதற்கு உழையுங்கள், ஆனால் அவர்களை உங்களைப் போல் ஆக்கிவிடாதீர்கள்" என்பதுதான் அவரது கவிதை வரிகள். மிக நீண்ட கவிதை அது. அதிலிருந்து சில வரிகளைத்தான் நான் உங்களிடம் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

உங்கள் குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதற்கு நீங்கள் தடை போடாமல், உதவி செய்யுங்கள். வழிகாட்டுங்கள். உங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

பெற்றோராக இருந்தாலும் ஆசிரியராக இருந்தாலும், பள்ளிகளாக இருந்தாலும், மாணவச் செல்வங்களை வளர்த்தெடுப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

"புத்தகங்களே குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்" என்று கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதியிருக்கிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.

குழந்தைகளின் கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் அடித்தளம். அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்தின் திறவுகோல். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் தமிழக அரசின் நோக்கம், குறிக்கோள், லட்சியம். பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் இந்திய துணைக் கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு இந்த நிதியாண்டில், இந்த பட்ஜெட்டில் 36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளை முழுமையாக மேம்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மைக் குழுக்களை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர் போன்றோர் இந்த பள்ளி மேலாண்மைக்குழுவில் இடம்பெறுவர். ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தன்னிறைவைப் பெற்றிருக்கக்கூடிய பள்ளியாக மாற வேண்டும். அந்தப் பள்ளியின் தேவைகள் என்னவென்று அறிந்து அவற்றை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமான சமமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மேலாண்மைக் குழுக்கள் எடுக்க வேண்டும்.

இதை செயல்படுத்துவதற்காகத்தான் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் கற்றல் அறிவை மேம்படச் செய்தல், பள்ளியின் வளங்களைப் பராமரித்தல், பள்ளியின் சுற்றுபுறச்சூழலை தூய்மையாக்குதல், இடைநிற்றலை தவிர்த்தல், இடைநின்ற குழந்தைகளை வயதுகேற்ப வகுப்பில் மீண்டும் பள்ளிகளில் சேர்த்தல், பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளில், புதிய மேலாண்மைக் குழுக்கள் ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும். அனைத்துவகை வன்முறைகளிலிருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும். குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் அன்பாக பழகக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். இதனை செயல்படுத்துவதற்காகத்தான் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20-ம் தேதி 37,558 அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டங்களில், மொத்தம் 23 லட்சத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இது முக்கியமான மைல்கல்லாக அமைந்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஒருசேர பங்கேற்றது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 37,558 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்" என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்