சென்னை: வரும் ஜூன் 19-ல் நடைபெறும் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவது சமூக அநீதி என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்ட 5 பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் அம்மொழியை புறக்கணித்து விட்டு போட்டித் தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 16 குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டித் தேர்வில் பங்கேற்க கடந்த ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தப் பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் தான் பங்கேற்க இயலும் என்றும், இரு தாள்களாக நடத்தப்படவிருக்கும் இந்தத் தேர்வுகளின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதாகும். மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்துப் போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகள் தமிழ் மொழியில் மட்டும் தான் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. அதற்கு முன்பாகவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இத்தகைய சூழலில் ஆங்கிலத்தில் மட்டும் தான் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்திருப்பது சமூக அநீதி ஆகும்.
» 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.24 முதல் 4.59 மீட்டர் வரை உயர்வு: தமிழக அரசு தகவல்
» தமிழக மீனவர்கள் விவகாரம் | மத்திய அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு
தமிழகத்தின் தாய்மொழி தமிழ். தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலம் பிற மாநிலத்தவர்கள் தமிழக அரசுப் பணிகளில் நுழைந்து விடுவதைத் தடுக்க அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான போட்டித் தேர்வின் இரண்டாம் தாளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டப்படிப்புகள் தமிழ் வழியிலும் நடத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில், தமிழகத்தில் நடத்தப்படும் ஒரு போட்டித் தேர்வின் முதல் தாளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
அதுமட்டுமின்றி, குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய 5 பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
சட்டம், மருத்துவம், பொறியியல், வனம் போன்ற குறிப்பிட்ட நிபுணத்துவம் தேவைப்படும் பணிகளுக்கு மட்டுமே அவை சார்ந்த பாடங்களை படித்திருப்பது கட்டாயத் தகுதியாக அறிவிக்கப்படும். குழந்தை பாதுகாப்பு என்பது குடிமைப் பணிகளில் ஒன்று தான். எந்த ஒரு பட்டப்படிப்பையும் படித்து, குழந்தை பாதுகாப்பு குறித்த விஷயங்களில் பயிற்சியை பெற்றுக் கொண்டால் இந்த பணியை சிறப்பாக செய்ய முடியும். இந்தியாவின் மிக உயர்ந்த நிர்வாகப் பணியாக கருதப்படும் குடிமைப் பணிகளுக்குக் கூட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தான் கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணி அதிகாரிகள் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை சிறப்பாக கையாளுகின்றனர். அதனால் குறிப்பிட்ட 5 படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது அநீதியாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் நோக்கங்களை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும். தமிழக அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணான வகையில் செயல்படுவது தவறு ஆகும். இதை உணர்ந்து குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; அப்பணிக்கான போட்டித்தேர்வின் முதல் தாள் வழக்கம் போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று அறிவிப்பதுடன், அதற்கேற்ற வகையில் கூடுதல் அவகாசத்துடன் திருத்தப்பட்ட அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago