கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்கக்கோரி தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்தவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தனர். இந்த வழக்கில் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலாஜி உள்பட 9 பேருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட முன்னாள் தொடக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி உள்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்பட 9 பேர் தண்டனையை ரத்து செய்யவும், 11 பேரின் விடுதலையை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பிலும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடக்கோரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். அதில் தான் 1.3.2014 முதல் 30.6.2014 வரை 3 மாதங்கள் மட்டுமே மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்தேன். விபத்து நடைபெற்ற பள்ளிக்கு அங்கீகாரம் கோரும் விண்ணப்பத்தை தொடக்கக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பியதை தவிர வேறு தொடர்பு இல்லை. தனக்கு 68 வயதாகிறது. நீரழிவு நோயால் அவதிப்படுகிறேன். எனவே ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் விசாரித்தனர். அரசு வழக்கறிஞர் வாதிடும்போது விபத்து நடைபெற்ற பள்ளிக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அப்போது பள்ளியில் கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி 20 குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை சரிசெய்யுமாறு தெரிவித்தனர். மீண்டும் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தபோது ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யாமலும், பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தாமலும் அங்கீகாரம் கோரிய விண்ணப்பத்தை தொடக்கக் கல்வி இயக்குநருக்கு மனுதாரர் அனுப்பியுள்ளார். இதனால் தீ விபத்து சம்பவத்துக்கு மனுதாரருக்கும் தொடர்பு உள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தனது கீழ் நிலையில் உள்ளவர்கள் அளித்த அறிக்கையை ஆய்வு செய்யாமலும், பள்ளிக்கு நேரில் சென்று ஏற்கெனவே தெரிவித்த குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளதா என்பதை பார்வையிடாமலும் பள்ளிக்கு அங்கீகாரம் கோரும் விண்ணப்பத்தை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதிலிருந்து மனுதாரர் தனது கடமையில் இருந்து தவறியுள்ளார். மனுதாரரின் பொறுப்பற்ற செயலால் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் மனுதாரருக்கும் தொடர்பு இல்லை என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றத்தால் வர முடியவில்லை.
மேலும் இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கலான மனுக்கள் அனைத்தும் ஜூன் 7-ல் விசாரணைக்கு வருகின்றன. இதனால் மனுதாரருக்கு இப்போதைக்கு நிவாரணம் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago