’நீட் விலக்கு மசோதாவில் ஆளுநரின் செயல் தமிழக மக்களுக்கு அவமதிப்பு’ - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: "நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தாக வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. ஆளுநரின் இந்தச் செய்கை என்னை அல்ல, தமிழக மக்களை அவமதிக்கக்கூடிய செயலாகும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

4 நாள் தொடர் விடுமறைக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது 110 விதியின் கீழ் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "ஏழரை கோடி தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவு, கடந்த 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு கண்ட தமிழக சட்டப்பேரவையில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்டமுன்வடிவு, கிண்டி ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

அப்படிப்பட்ட வேளையில் அதே ஆளுநர் மாளிகையில் நடக்கக்கூடிய தேநீர் விருந்து என்ற விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், சட்டப்பேரவை மாண்பினை மேலும் சிதைப்பதாகவும் அமைவதாலயே அந்த கொண்டாடட்டத்தில், கலந்துகொள்ள இயலாத நிலை இந்த அரசுக்கு ஏற்பட்டது. இதுகுறித்து ஆளுநருக்கு நானே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அந்தக் கடிதத்தில் அதற்கான விவரங்கள் அனைத்தும் விரிவாக தரப்பட்டுள்ளன.

ஆளுநருடன் எங்களுக்கு எந்தவிதமான தனிப்பட்ட முறையிலான விரோதமும் இல்லை. தனிப்பட்ட முறையில் தமிழக ஆளுநருக்கும், தமிழக முதல்வரான எனக்கும் மிகவும் சுமுகமான உறவு இருக்கிறது. நேரில் பேசும்போது இந்த ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் நாங்கள் ஆட்சி நடத்தும் முறை குறித்து ஆளுநர் பொது மேடையிலேயே பாராட்டிப் பேசியிருக்கிறார். அது ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது.

தமிழக ஆளுநர் பழகுவதற்கு இனிமையானவர். எங்களுக்கு அதிகமான மரியாதையை அவர் தருகிறார். ஆளுநர் என்ற முறையில் அந்தப் பதவிக்கான மரியாதையை நாங்களும் அளிக்கிறோம், அளித்துக் கொண்டிருக்கிறோம், தொடர்ந்து அளிப்போம். இது அரசியல் எல்லைகளை கடந்த பண்பாடு. இந்த பண்பாட்டை நாம் எப்போதும் எந்த நிலையிலும் காக்க வேண்டும், காப்போம். தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டுக்களை விட, தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மையும் பலனுமே முக்கியமானது. அதையே முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

இந்த சட்டப்பேரவையின் மாண்பை, தமிழக மக்களின் உணர்வை மதித்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தாக வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. இந்த சபையின் மாண்புக்கு விரோதமானது ஆகும். ஆளுநர் அனுப்பி வைக்காதது என்பது எனக்கு அல்ல, இந்த தமிழக மக்களை அவமதிக்கக்கூடிய செயலாகும்.

நான் இந்த பேரவைக்கு சொல்வதெல்லாம் சொல்ல விரும்புவதெல்லாம், கடந்த 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில், நான் எத்தனையோ வலிகளையும், அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன். அது எனக்கு ஒரு பொருட்டல்ல. இந்த 50 ஆண்டுகால பொது வாழக்கை கற்று தந்தது எல்லாம் வலிகளையும், அவமானங்களையும், புகழ்ச்சிகளையும், பாராட்டுகளையும், புறந்தள்ளிவிட்டு என் கடன் பணி செய்து கிடப்பதுதான். அவ்வாறே நான் செயல்பட்டு வருகிறேன்.

பொது வாழ்க்கையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதுதான் தலையாய கடமை என்பதே அண்ணா, கருணாநிதி வழியில் நான் கற்றுக்கொண்ட பாடம். அந்த வழியில் தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். தமிழக மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்றால், வலிகளையும், அவமானங்களையும் நான் தாங்கிக்கொள்ள எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக இருக்கக்கூடிய நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் முக்கியம். அதற்காகத்தான் இந்த முடிவு எடுக்ககப்பட்டது. எனவே தனிப்பட்ட முறையில் ஒரு மனிதருக்கான புகழுரைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, தமிழக மக்களின் நலன்கருதி தொடர்ந்து நான் முயற்சித்துக் கொண்டேயிருப்பேன். தமிழக முதல்வராக நூற்றாண்டு கண்ட இந்த சட்டப்பேரவையின் மாண்பைக் காக்கக் கூடிய பொறுப்பும் என்னுடையது. அதை புரிந்துகொண்டதால்தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டது.

தமிழக மக்களின் உணர்வைத் தொடர்ந்து நாம் அனைத்து மன்றங்களிலும் எதிரொலிப்போம். அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவோம். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை இந்த சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், 8.2.2022 அன்று நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இன்றுடன் 70 நாட்கள் ஆகின்றன. இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க, ஆளுநர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதுதொடர்பான நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, தேவைப்பட்டால், அனைத்துக் கட்சி கூட்டத்தைக்கூட்டி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து விட்டு, முடிவெடுக்கப்படும்" என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்