ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல்லாயிரக்கணக்கானவர்களால் விண்ணப்பம் செய்ய முடியவில்லை.

பி.எட். பட்டப் படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் விண்ணப்பிக்க முடியவில்லை. சர்வர் பிரச்சினை, கால அவகாசம் போதாமையால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.

கடந்த காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், இம்முறை சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வசதியாக நாளை 18-ஆம் தேதி முதல் இரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE