சென்னை: விவசாய நிலங்களின் இடையே எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துமாறு உயிரிழந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்
இதுகுறித்து இன்று ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மக்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால், இன்று மக்களின் வாழ்வாதாரங்களைப் பற்றி கண்டு கொள்ளாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூரு வரை தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் ஊடே எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியினை கெயில் நிறுவனம் மேற்கொள்ள முயற்சித்தபோது, அதுதொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் 2013ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது.
அந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாய நிலங்களின் இடையே எரிவாயு குழாய்கள் அமைத்தால் விவசாயிகளின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்படும் என்றும், நிலங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும், எரிவாய்வுக் கசிவு ஏற்படும் என்றும், விவசாயப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில், தேசிய நெடுஞ்சாலை வழியாகக் குழாய்கள் அமைக்கும் பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொதுவாக அனுமதி வழங்காது என்றும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கெயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
» மதுரை வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி; பலர் காயம்: ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு
» மதுரை சித்திரைத் திருவிழா | பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மேற்படி கருத்துக்களின் அடிப்படையில், விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை பதிக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் உடனடியாகக் கைவிட வேண்டுமென்றும், தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டு அந்த முடிவு சென்னை உயர் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, அங்கு கெயில் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டாலும், இந்தத் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில், சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஓசூர் வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாய நிலங்கள் இடையே எரிவாயு குழாய் அமைக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதைக் கண்டித்து அப்போதே நான் அறிக்கை வெளியிட்டதோடு, வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக எரிவாயுக் குழாயைப் பதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதல்வரை கேட்டுக் கொண்டேன். இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
தற்போது, தருமபுரி மாவட்டம், பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கெயில் நிறுவனத்தினர் மூன்று நாட்களாக எரிவாயு குழாய் அமைக்க நில அளவீடு செய்து வருவதாகவும், இதனைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் தன்னுடைய நிலம் பறிபோகப் போகிறது என்ற பயத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்தச் செய்தி மன வேதனையை அளிக்கிறது.
வேளாண் துறை சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை ஆய்ந்து உடனடி நிவாரணம் வழங்குவதற்கும், விவசாய நலத் திட்டங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக-வின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு, இன்று வேளாண் தொழிலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எரிவாயு குழாய்களை அமைக்கும் பணியை வேடிக்கைப் பார்ப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் ஆகும்.
எனவே, முதல்வர் இதுகுறித்து உடனடியாக கெயில் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலைகள் ஓரமாக அமைக்க வலியுறுத்தவும், உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago