சென்னை: நாகூர் தர்கா நிர்வாகத்தை 8 பேர் அடங்கிய அறங்காவலர்கள் குழுவிடம் ஒப்படைக்குமாறு வக்பு வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா உலகப் புகழ் பெற்றது. சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் வணங்கிச் செல்லும் புனித தலமாக விளங்குகிறது. கடந்த 1946-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஸ்கீம் உத்தரவு மூலமாக நாகூர் தர்கா நிர்வாகத்தை கவனிக்க அறங்காவலர்கள் குழுவும், அறிவுரை குழுவும் உள்ளது.
இந்த நிலையில், தர்கா அறங்காவலர்கள் குழுவில் ஏற்பட்ட காலி இடத்தை நிரப்புவது மற்றும் நிர்வாக முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தர்கா நிர்வாகத்தை 4 மாத காலத்துக்கு கவனிக்க, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன், முன்னாள் மாவட்ட நீதிபதி எஸ்.எஃப்.அக்பர் ஆகியோர் அடங்கிய தற்காலிக நிர்வாக குழுவை நியமித்து கடந்த2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நாகூர் தர்காவில் கடந்த ஜன.4 முதல் 17-ம் தேதி வரை நடந்த 465-வது உருஸ் விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கக் கோரி முஹாலி முத்தவல்லி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது கோரிக்கையை பரிசீலிக்க வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், கரோனா சூழல் காரணமாக வக்பு வாரியம் அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், முஹாலி முத்தவல்லியின் கோரிக்கையை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தர்காவின் தற்காலிக நிர்வாகக் குழு சார்பில், உருஸ் விழா முடிந்த பிறகு கடந்த பிப்.4-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘‘நாகூர் தர்கா நிர்வாகத்தை 4 மாதங்களுக்கு மட்டுமே கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாகக் குழு 4 ஆண்டுகளாக அப்பொறுப்பில் தொடர்வது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினர். தர்கா நிர்வாகத்தை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அதே அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘தர்கா நிர்வாகத்தை தொடர விரும்பவில்லை. எனவே, நிர்வாகத்தை அறங்காவலர்கள் குழு வசம் ஒப்படைக்கலாம்’’ என தற்காலிக நிர்வாகக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நாகூர் தர்கா நிர்வாகத்தை 8 பேர் அடங்கிய அறங்காவலர்கள் குழுவிடம் ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டனர். தற்காலிக நிர்வாகக் குழுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago