பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவிடும் வகையில் உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகள்: ஏப்ரல் 18 முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 4 நாட்கள் இருகட்டமாக நடத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலும், அதன் தகவல்களை அறியவும் ‘நான் முதல்வன்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், உயர்கல்வி மற்றும்வேலைவாய்ப்பு குறித்த பல்வேறுதகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு பல்துறை நிபுணர்களைக் கொண்டு வரும்18, 19-ம் தேதிகளில் முதல்கட்டமாகவும், 22, 23-ம் தேதிகளில் 2-ம் கட்டமாகவும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், மருத்துவம், அறிவியல்,பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வங்கி, பணப் பரிவர்த்தனை, காப்பீடு, அரசு, விவசாயம், தொலைதொடர்பு சட்டம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

அந்தந்த துறைகளில் உள்ள உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து அவர்கள் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கஉள்ளனர். உயர்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், நுழைவுத் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளனர்.

அனைத்து அறிவியல் பிரிவு மாணவர்களும் வரும் 18 மற்றும் 22-ம் தேதிகளிலும், மற்ற பிரிவு மாணவர்கள் 19 மற்றும் 23-ம் தேதிகளிலும் ஒரே இடத்தில் கூடி, நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்த 3 மணிநேர பயிற்சி வகுப்பை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்துவதற்கு உரிய அறிவுறுத்தல்களையும், அந்தந்த பாட ஆசிரியர்கள் வாயிலாக வழங்க வேண்டும்.

இதற்கான பணிகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE