மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சி; மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் - இன்று தேரோட்டம்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.5-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 8-ம் நாள் விழாவான ஏப்.12-ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அன்று தொடங்கி 4 மாதங்களுக்கு மதுரை மாநகரில் அம்மனின் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.

10-ம் நாளான நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில்வளாகத்தில் வடக்காடி வீதியில் திருக்கல்யாண மேடை சுமார் 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கு பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.

காலை 6 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும்,பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளினர். தனித்தனியாக ஆடி வீதிகளில் வலம் வந்து கன்னி ஊஞ்சல் ஆடி, திருக்கல்யாண மேடையில் காலை 10.10 மணிக்கு எழுந்தருளினர். வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்வுகள் தொடங்கி, காப்புக்கட்டுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. சுவாமிக்கு இடதுபுறம் முருகன், தெய்வானையும், மீனாட்சி அம்மனுக்கு வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும் வீற்றிருந்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின்
10-ம் நாளான நேற்று மீனாட்சி - சுந்தரேசுவரர்திருக்கல்யாணத்தை தரிசிக்க
திரண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி.

திருக்கல்யாணத்தின்போது சுவாமியாக சிவேஷ்சங்கர பட்டரும், அம்மனாக ஹாலாஷ் பட்டரும் வேடம் தரித்திருந்தனர். மங்கள இசை முழங்க மங்கள நாண் பக்தர்களுக்குக் காண்பிக்கப்பட்டு காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சரியாக 10.51-க்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. மணமக்களாக வீற்றிருந்த இருவரும் மலர் மாலைகளை மாற்றிக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து தங்கக் கிண்ணத்தில் சந்தனமும், தங்கச்செம்பில் பன்னீரும் தெளிக்கப்பட்டது. தங்கத் தட்டில் தீபாராதனையும் காட்டப்பட்டது. திருக்கல்யாணத்தின்போது கூடியிருந்த பக்தர்கள் `தென்னாடுடைய சிவனே போற்றி', `எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என முழக்கம்எழுப்பி வணங்கினர்.

இத்திருக்கல்யாணத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் ஆடிவீதி, சித்திரை வீதிகளில் குவிந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக எல்.சி.டி. டிவிக்கள் பல இடங்களிலும் வைக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதைக்கண்ட பெண்பக்தர்கள் மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் முடிந்ததும் தாங்களும் புதுத் தாலி மாற்றிக் கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கட்டிய கயிறு, குங்கும டப்பா போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கரோனாவால் 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்பின்றி திருக்கல்யாணம் நடந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றதால் வழக்கத்தைவிட பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். மேலும் சித்திரைப் புத்தாண்டு என்பதால் சுவாமி தரிசனம் செய்யபக்தர்கள் திரண்டு வந்தனர்.

11-ம் நாளான இன்று காலைதேரோட்டம் நடக்கிறது. நாளை 12-ம் நாள் விழாவாக தீர்த்தம், தேவேந்திர பூஜையுடன் மீனாட்சிஅம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவுபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE