தேர்தலை புறக்கணிக்க பல்லடம் கல்லம்பாளையம் அருந்ததியர் காலனி மக்கள் முடிவு

By இரா.கார்த்திகேயன்

பல்லடம் கல்லம்பாளையம் அருந்ததியர் காலனியில், கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பல்லடம் 3-ம் நிலை நகராட்சியின் 1-வது வார்டுக்குட்பட்டது கல்லம்பாளையம் கிராமம். மொத்தம் 1500 வாக்காளர்கள் உள்ளனர். இதில், அருந்ததியர் காலனியில் 500 வாக்குகள் உள்ளன.

எங்கள் காலனியில் உள்ள பொதுக்கழிப்பிடம் பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் உடைக்கப்பட்ட நிலையில், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலை, மாலை வேளைகளில் இயற்கை உபாதைக்கு திறந்தவெளியை பயன்படுத்த வேண்டியுள்ளது.

பொதுமக்களுக்கு கட்டித்தரப் பட்ட தொகுப்பு வீடுகளும் முறையாகப் பராமரிக்காமல் இடிந்துவிழும் அளவுக்கு சிதிலம் அடைந்துள்ளன. கட்டிடம் எப்போது இடிந்துவிழும் என்பதுகூட தெரியாமல் வேதனையோடு இரவுகளை கழித்து வருகிறோம். ஒரு தொகுப்பு வீடு, முழுமையாக இடிந்துவிட்டது.

காலனியில் சாக்கடை வசதியும் இல்லை. எங்களுக்கான சுடுகாடு என்பதும் போதிய இடவசதி இல்லாமல் தான் உள்ளது. சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. அதை செப்பனிடாமலே விட்டுவிட்டனர். மழை பெய்தால், அந்தக்குழியில் தண்ணீர் நிறைந்து விடும். அதைத்தாண்டி, இறந்தவர் களை கொண்டு சென்றுதான் அடக்கம் செய்ய வேண்டும்.

இயற்கை உபாதைக்கு திறந்த வெளியை பயன்படுத்துவதால், சுடுகாட்டுப் பாதையில் மழைக் காலங்களில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

சமுதாயக்கூட வசதி இல்லாததால், பல்லடம் சென்று மண்டபம் பிடித்து ஒரு பெரும் தொகை செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம். இவற்றை தீர்க்கக்கோரி நகராட்சி ஆணையர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பலரிடம் மனு கொடுத்தோம். யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், நிறைவேற்றப் படாத கோரிக்கைகளை முன்வைத்து, தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று எங்கள் பகுதியில் அறிவிப்பு பலகை வைத்தும், வீடுகள் மற்றும் வீதிகளில் கருப்புக் கொடி ஏற்றியும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதையடுத்து, கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் பலரும் வந்து பார்வையிடுகின்றனர். தேர்தல் முடிந்தபிறகு செய்து தருகிறோம் என்றுதான் உறுதியளிக்கிறார்கள். ஆகவே நாங்கள் தேர்தலை புறக்கணிப்பது உறுதி என்றனர்.

பல்லடம் நகராட்சி ஆணையாளர் நாராயணனிடம் கேட்டபோது, “கல்லம்பாளையம் பொதுமக்கள் 5 கோரிக்கைகளை வைத்தனர். அவர்கள் முன்வைத்த அனைத்துப் பணிகளும் தற்போது தொடங்கிவிட்டோம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, தற்போது செய்ய முடியாது. தொகுப்பு வீடுகளை நகராட்சி தரவில்லை. ஆகவே, அதை நாம் பாரமரிக்க முடியாது. பொதுமக்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார்.

கஞ்சித் தொட்டி திறப்பு

பல்லடம் கல்லம்பாளையம் அருந்ததியர் காலனியில் நேற்று கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அங்கு அதிகாரிகள் விரைந்துசென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் முடிந்த பின்னர் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்தனர். இதில் அதிருப்தியடைந்த பொதுமக்கள், கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்