சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ‘கம்பி வட ஊர்தி’ (ரோப் கார்) சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் 750 அடி மலை உச்சியில் உள்ளது. இந்த கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 1,305 படிக்கட்டுகள் வழியாக மலை உச்சிக்கு சென்று வருகின்றனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மலை உச்சிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய டோலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த மு.கருணாநிதி சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்ய கம்பி வட ஊர்தி வசதி ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு ரூ.9 கோடி மதிப்பில் கம்பிவட கட்டமைப்பு அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
அதன் பிறகு, ரூ.8.26 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார்.
தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சோதனை ஓட்டத்தை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சோதனை ஓட்டமானது 2 வாரங்களுக்கு நடைபெறும். தினசரி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை மணல் மூட்டைகளை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும். இப்பணிகளை கண்காணிக்க பணிதர ஆய்வு நிறுவனம் நேரடியாக ஆய்வு செய்து அதற்கான சான்றிழை வழங்கும்.
இந்த சான்றிதழ்கள் தமிழ்நாடு அரசின் தொழில் நுட்ப வல்லுநர் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். (ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், ஸ்டர்ச்சரல் இன்ஜினியரிங் ரிசர்ச் சென்டர், பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் மின்சாரம், இந்து சமய அறநிலைய துறை) உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் நேரடியாக கம்பிவட ஊர்தியை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பித்த பிறகு இறுதி சான்றிதழ் வழங்கப்பட்டு கம்பிவட ஊர்தி பக்தர்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்படும்.
கம்பிவட ஊர்தியில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் தலா 4 பேர் வீதம்8 பெட்டிகளில் மொத்தம் 32 பேர் பயணிக்க முடியும். கீழே இருந்து மேலே செல்ல 4 பெட்டிகளும், மேலிருந்து கீழே இறங்க 4 பெட்டிகளும் என மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன.
இந்த கம்பிவட ஊர்தியானது 25 சதவீதம் வேகத்தில் இயங்கும். ஒரு மணி நேரத்துக்கு 400 பக்தர்களை ஏற்றி சென்று இறக்க முடியும். ஒரு முறை மேலே ஏறுவதும், இறங்குவதும் என 4 நிமிடங்களுக்குள் ஒரு ஓட்டம் நிறைவடையும். கம்பிவட ஊர்தியின் பெட்டிகள் அனைத்தும் மிகவும் தரம்வாய்ந்ததாகவும், சிறப்பானதாக வும் அமைக்கப்பட்டுள்ளன.
கம்பிவட ஊர்தியின் இறுதி உறுதிச்சான்றிதழ் அனைத்து ஆய்வுகளுக்கு பிறகு கிடைக்க பெற்றவுடன் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், கம்பிவட ஊர்தியில் அமைச்சர் ஆர்.காந்தி பயணம் செய்து, மேலே சென்று லட்சுமி நரிசம்மரை தரிசனம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ‘‘கம்பிவட ஊர்தி திட்டம் ஆரம்பிக்கும் போது திட்ட மதிப்பீடு ரூ.2.25 கோடியாக இருந்தது. அதன்பிறகு ரூ.8.26 கோடி ஒதுக்கப்பட்டது. கம்பி வட ஊர்தி பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் 7 பேர் இணைந்து ரூ.20 கோடிக்கு மேல் சொந்த பணம் செலவில் கட்டமைப்பு தேவைகள் அமைக்க தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அடுத்த 6 மாதங்களுக்குள் முடிவுக்கு வரும். இப்பணிகள் முடிந்த பிறகு தமிழக முதல்வர் கம்பி வட ஊர்தி ஓட்டத்தை தொடங்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டம் நடந்து, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு அடுத்தக்கட்டமாக அடிப்படை தேவை கட்டிடங்கள்கட்டும் பணிகள் விரைவுப்படுத்தப் படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம், கோயில் உதவி ஆணையர் ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago