சென்னை: உள்ளாட்சி அமைப்புகளும் அதன் பிரதிநிதிகளாகிய நீங்களும் தான் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்தான நம்பிக்கைகளாக இருக்கிறீர்கள். அதனால் மக்களோடு இருங்கள், மக்களுக்காக இருங்கள் என உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான நிர்வாகப் பயிற்சி முகாமின் நிறைவு விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: "இந்த பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். உள்ளாட்சி அமைப்புகளும், அதன் பிரதிநிதிகளாகிய நீங்களும் தான் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்தான நம்பிக்கைகளாக இருக்கிறீர்கள். நீங்கள் முறையாக, செயல்பட்டீர்கள் என்றால், மக்களாட்சித் தத்துவம் மகத்தான வளர்ச்சியை பெற்றிட முடியும். எனவே, நான் உங்களுக்கு முதலில் சொல்லிக் கொள்ள விரும்புவது மக்களோடு இருங்கள், மக்களுக்காக இருங்கள் என்பது தான்.
பேரறிஞர் அண்ணா அடிக்கடி மக்கள் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும், எம்.பி.யாக இருந்தாலும், எம்எல்ஏவாக இருந்தாலும், மேயராக இருந்தாலும், கவுன்சிலராக இருந்தாலும், எந்த பிரநிதிகளாக இருந்தாலும், மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியது உண்டு. எனவே மக்களோடு இருந்தால், மக்களுக்காக இருந்தால் உங்களது பணியை மிகச் சிறப்பாகச் செய்தீர்கள் என்ற பாராட்டை அது உங்களுக்கு நிச்சயமாகப் பெற்றுத்தரும். உங்களுக்கு கிடைத்திருக்கிற இந்த வாய்ப்பு, எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பு. எத்தகைய நம்பிக்கையை மக்கள் உங்கள் மீது வைத்திருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து நீங்கள் செயல்படுங்கள். உங்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நீங்கள் வீணாக்கி விடக்கூடாது. மக்களது நம்பிக்கையை நாள்தோறும் பெறுவதன் வழியாக, இந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
இந்திய அரசமைப்பு 74-ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் முதலாவது உள்ளாட்சித் தேர்தல் 1996-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன்பிறகு 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில், குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடத்தப்படவில்லை. இப்போது எந்தவிதமான முறைகேடுகளுக்கும் கிஞ்சிற்றும் இடம் கொடுக்காமல் தேர்தல் நடத்தப்பட்டு முடிவடைந்திருக்கிறது.
» சமத்துவ நாளில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துங்கள்: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
» ”ஏ.ஆர்.ரஹ்மான் ஆசைதான் எங்கள் ஆசையும்” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. 1373 மாநகராட்சி உறுப்பினர்களும், 3842 நகராட்சி உறுப்பினர்களும், 7604 பேரூராட்சி உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மறைமுகத் தேர்தல் மூலமாக 21 மேயர்கள், 21 துணை மேயர்கள், 138 நகராட்சித் தலைவர்கள், 136 நகராட்சித் துணைத் தலைவர்கள் முறையே 487 பேரூராட்சித் தலைவர்கள், 483 பேரூராட்சித் துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இப்படி மக்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவர்க்கும் நான் இந்த நேரத்திலே எனது பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சிறப்பான செயல்பாடுகள் தமிழ்நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும், தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உங்களை நான் உரிமையோடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இன்றைக்கு நீங்கள் பொறுப்பிற்கு வந்திருக்கிறீர்கள் என்றால், அதை பதவியாக நினைக்காமல், பொறுப்பாக நினைத்தீர்கள் என்றால், பொறுப்போடு உங்களால் பணியாற்ற முடியும் என்பதை இந்த நேரத்தில் தான் உறுதியிட்டு தெரிவிக்க விரும்புகிறேன்.
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது ஒவ்வொரு அடியையும் கவனத்தோடு வைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகமும் மாமன்ற நடவடிக்கைகளும் சிறந்து விளங்கிட மாநகராட்சிகளின் சட்டங்களையும், விதிமுறைகளையும் மேயர்கள் அறிந்திருப்பது அவசியம். மாமன்றத்தின் நடைமுறைகள் குறித்தான சட்ட விதிகள், நிர்வாக வழிமுறைகள், கணக்கு முறைகள், நிதி நிர்வாகம் போன்ற அனைத்தும் அறிந்தவர்களாக நீங்கள் உங்களை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். விதிமுறைப் புத்தகத்தை தொடர்ந்து அவ்வப்போது நீங்கள் படிக்க வேண்டும். அதில் இருக்கின்ற முக்கியமானதை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். விதிமீறல் என்பது எங்கும் எப்போதும் எந்தச் சூழலிலும் வந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களை தற்சார்புடைய நிறுவனங்களாக முன்னேற்றுவது அரசின் மிக முக்கிய நோக்கம்.மக்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும், சேவைகளையும் பல்வேறு வழிகளில் நகராட்சி நிர்வாகம் திறம்பட செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளான பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், போதிய மற்றும் தரமான குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, குடிசை பகுதிகளை மேம்படுத்துதல், நகர்ப்புற ஏழைகள் வாழ்வதற்கு வீடுகளை கட்டிக் கொடுத்தல், சாலையோர வியாபாரிகளின் நலன் காத்தல், வீடு இல்லாதவர்களுக்கு புகலிடம் அமைத்து பராமரித்தல் மற்றும் தனி நபர் மற்றும் சமுதாய கழிப்பிடம் அமைத்தல் போன்றவையுடன் இன்னும் பலவிதமான சேவைகளை நகராட்சி நிர்வாகத்துறை மேற்கொண்டு வருகிறது. இவை அனைத்தும் மக்களுக்கு சரியாகத் தரப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உங்கள் கையில் இருக்கிறது.
தமிழகத்தின் நிதி நிலைமை பற்றி உங்களுக்குத் தெரியும். எவ்வளவு கடனில் இருக்கிறோம், எவ்வளவு வட்டி கட்டிக் கொண்டு இருக்கிறோம். இது எல்லாம் அவ்வப்போது அரசின் சார்பில், நிதித்துறையின் சார்பில் சட்டமன்றத்தில் பேசப்பட்டு கொண்டு இருப்பது எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. எனவே, நிதிநிலைமைக்கு ஏற்றவாறுதான் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்ய முடியும். அப்படி ஒதுக்கீடு செய்யும் நிதி முறையாகச் செலவு செய்யப்பட வேண்டும். அதனை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு, இந்தியாவிலேயே பெரிய மாநிலங்களில் அதிக நகர்ப்புற மக்கள் தொகை (48 விழுக்காடு) கொண்ட மாநிலம். நகர்ப்புறங்களில் அதிகரித்து வரக்கூடிய மக்கள்தொகைக்கு ஏற்றவாறு நாம் திட்டங்களை வகுத்தாக வேண்டும். அனைத்து மக்களுக்கும் சீரான, நீடித்த, நிலையான வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுப்பதே இத்துறையின் முக்கிய குறிக்கோள். வமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்திடவும், சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக பேணவும், நகர்ப்புற கட்டமைப்பை மேம்படுத்திடவும், நேர்மையான நிர்வாகம் அமைந்திட மாநகராட்சி சட்ட விதிகளுக்குட்பட்டு தீர்மானங்களை நிறைவேற்றி நல்லமுறையில் செயல்படுத்தி அமைந்திருக்கக்கூடிய தமிழக அரசிற்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டுகிறேன்.
தரமான குடிநீர் வசதி, தெருவிளக்குகள் அமைத்தல், சாலைகள் மேம்படுத்துதல், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைத்தல், பொதுசுகாதாரம் சார்ந்த திடக்கழிவு மேலாண்மை - ஆகியவற்றுக்கு அதிகமான முக்கியத்துவம் தாருங்கள்.‘மக்கள் சேவையில் மாநகராட்சி’ ‘நமது சேவையில் நகராட்சி’ என்பதுதான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்.
இதனைச் நீங்கள் செயல்படுத்திக் காட்டுங்கள்.செயல்படுத்திக் காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றித் தர வேண்டும்.
மாநகராட்சி சட்டங்களில் வார்டு குழுக்களுக்கான பொறுப்புகளும் அதிகாரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மாநகராட்சியின் நிர்வாகத்தில் மாமன்றத்திற்கு உதவிட கணக்கு குழு, கல்வி குழு, பொது சுகாதார குழு, வரி விதிப்பு மற்றும் நிதி குழு, நகரமைப்பு குழு மற்றும் பணிக்குழு ஆகிய நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஏற்பாட்டின்படி மாநகராட்சி அமைப்பிற்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையேயான தொடர்பின் இடைவெளி குறைந்துள்ளது. வார்டு குழுக்கள் அடிமட்ட அளவில் செயல்படுவதால் மக்களின் குறைகளை உடனுக்குடன் களைய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேயர்கள், மாமன்ற கூட்டங்களை காலமுறைப்படி கூட்ட வேண்டும். சட்டப்படியாக நிறைவேற்றப்பட வரவேண்டிய கடமைகளை நிறைவேற்றியும் அதிகாரங்களை முறையாக செலுத்துதல் வேண்டும். மாமன்றங்களின் தீர்மானங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்தல் வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் நல்ல முறையில் உள்ளதா என்பதையும், தூய்மையான முறையில் அனைத்துப் பகுதிகளும் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் நாள்தோறும் நீங்கள் ஆய்வு செய்திட வேண்டும். மக்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு, அதை உடனுக்குடன் சரிசெய்கிற நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அரசினுடைய நலத்திட்டங்களை மக்களுக்கு உடனுக்குடன் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். என்னதான் நாங்கள் திட்டங்களை தீட்டினாலும், பெரிய பெரிய சாதனைகளை படைத்தாலும் அதை மக்களுக்கு போய் சேர்க்கக்கூடிய பணி யாரிடத்தில் இருக்கிறது என்றால் அது உங்களிடத்திலே தான் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
நகர்ப்புற சேவைகளை மக்கள் அறியும் வண்ணம் வழிவகைகளை ஏற்படுத்திட வேண்டும். மாநகராட்சி சேவைகள் மக்களை எளிதில் சென்றடைய தேவையான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி வழங்கிட வழிவகை செய்ய வேண்டும். மக்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். தமிழகம் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகத்தில் நல்லாட்சி செய்திட முழுமையான ஈடுபாட்டோடு செம்மையான நிர்வாகத்தை மக்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
தங்களுக்கான பொறுப்புகளையும் கடமைகளையும் நன்கு அறிந்துகொண்டு தாங்கள் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெருமை சேர்த்து தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயலாற்றிட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்குமான வளர்ச்சி என்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியை நாங்கள் நடத்த விரும்புகிறோம். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி, அனைத்து சமூகத்தின் வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களுக்குமான வளர்ச்சி என்ற திராவிட மாடல் ஆட்சிக்கு உங்களது செயல்பாடுகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரநிதிகளும், அரசு அதிகாரிகளும் ஒன்றிணைந்து ஓர் அணியாக செயல்பட்டு மக்களுக்கான பணிகளை செய்திட வேண்டும். உங்களை நம்பி நாங்கள் எங்களது திட்டங்களை ஒப்படைத்திருக்கிறோம். அதை மறந்துவிடாதீர்கள்.
ஆட்சிக்கு வந்து இந்த 11 மாத காலம், அடுத்த மாதம் 7ஆம் தேதி வந்தால் ஒரு வருடம் ஆகப் போகிறது. இதற்கிடையிலே ஏற்கனவே ஊரகப் பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம் என்றால் இந்த ஆட்சியினுடைய சாதனைகள் மக்களைப் போய் சேர்ந்திருக்கிறது, மக்கள் நம் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.அந்த நம்பிக்கைக்கு வலுசேர்க்க கூடிய அளவில் உங்கள் பணி அமைந்திருக்க வேண்டும் அதற்கு பணியாற்ற உறுதி எடுத்துக் கொள்ளக்கூடிய வகையிலே இந்த பயிற்சி பாசறைக் கூட்டம் பயன்பெற வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago