தருமபுரி | கெயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை: நீதி கேட்டு கிராம மக்கள் போராட்டம்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: விவசாய நிலத்தில் கெயில் எரிவாய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். எரிவாயு குழாய் பதிக்கும் பணியை கைவிடக் கோரி அவரின் சடலத்துடன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடகா மாநிலம் வரை கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2011-16 அதிமுக ஆட்சிக் காலத்தில்,எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை விளைநிலங்களில் பதிக்கக் கூடாது என்றும், தேசிய நெடுஞ்சாலையோரமாக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அந்தப் போராட்டம் மிகவும் வலுவடைந்த நிலையில், தமிழக அரசு, "விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கெயில் திட்டத்தை தமிழகத்தின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த அனுமதிக்க முடியாது" என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கில் கெயில் நிறுவனத்துக்கு சாதகமாக நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு வட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த குழாய்கள் பதிக்கப்பட உள்ள பகுதிகளில் ஒன்றான பாலவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக கெயில் நிறுவனம் சார்பில் நில அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

"தங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நிலங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் எரிவாயுக் குழாய் பதிக்க விளைநிலங்களை தர மாட்டோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க இருக்கிறோம். எனவே, அளவீட்டுப் பணிகளை நிறுத்த வேண்டும்" என்று அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனால் அன்று அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பாலவாடி பகுதியில் உள்ள கிராமங்களில் கெயில் நிறுவனம் மீண்டும் நிலம் அளவிடும் பணிகளை மேற்கொண்டது. இதற்காக அப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கிடையில், விளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாலவாடி அடுத்த கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் (45) தனது விளைநிலத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, கணேசனின் குடும்பத்தாரும், உறவினர்களும் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் சென்று தருமபுரி - பென்னாகரம் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா ஆகியோர் நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். "தங்கள் கோரிக்கைகளை ஏற்று அரசு அறிவிப்புகளை வெளியிட்டால் தான் போராட்டத்தை கைவிடுவோம்" என்று கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்