இந்திய - இலங்கை மீனவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை: தமிழக அரசு கோரிக்கை 

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய - இலங்கை மீனவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் தமிழக அரசு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

மீனவர்கள் தொடர்பான பிரச்சனையில் இந்திய - இலங்கை மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விடுவிப்பது, ரோந்து நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மீனவர்களை மனிதாபிமான முறையில் கையாள்வது குறித்து மீன்வளத்திற்கான கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை, ஐந்து சுற்றுகள் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

5 -வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 8 கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு சார்பில் விவாதிக்கப்பட்டது.

இதன்படி மீன்பிடிப்பின் போது ரோந்து பணியில் கூடுதல் ஒத்துழைப்பு வழங்குதல். தமிழக மீனவர்களின் சமீபத்திய மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை பகிர்தல், கைது நடவடிக்கையின் போது மனிதாபிமான அணுகுமுறையை கையாளுதல், தமிழக மீனவர்களின் படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவித்தல், இலங்கை மீன்பிடிச் சட்டத் திருத்தம், 2018க்கு முன்னர் கைது செய்யப்பட்ட தமிழக மீன்பிடி படகுகளை விடுவித்தல், பாக் நீரிணை பகுதியில் கடல் சுற்றுச்சூழலை மேம்படுத்த கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க மீனவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் இந்தக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE