சென்னை: மின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதால் தமிழகம் இருளில் மூழ்க நிலை ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோடை காரணமாக மின்சாரத் தேவை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நிலக்கரி இல்லாததால் ஒட்டுமொத்த இந்தியாவும் கடுமையான மின்வெட்டை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எதிர்கொண்டிருக்கும் சிக்கலை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழகம் இருளில் மூழ்குவதை தடுக்க முடியாது.
காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் காரணமாக கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது. நிலைமையை சமாளிக்க பல்வேறு தரப்பினரும் குளிரூட்டிகளை பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால், மின்சாரத் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த மின் தேவை கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தமிழகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழகத்தின் மின் தேவை கடந்த மார்ச் 29-ஆம் தேதி வரலாறு காணாத அளவில் 17,196 மெகாவாட், அதாவது 37.57 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய அதிகபட்ச மின்தேவையான 16,151 மெகாவாட், 37 கோடி யூனிட்டை (03.04.2019) விட 1.5% அதிகமாகும். ஆனால், அதிகரிக்கும் மின்தேவைக்கு இணையாக மின்சார உற்பத்தியை உயர்த்த முடியாத நிலையில் தான் இந்தியா உள்ளது.
இந்தியாவின் மின்னுற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 15.20% அதிகரித்திருக்கிறது. இது அடுத்து வரும் மாதங்களில் 17.60% ஆக உயரக்கூடும். ஆனாலும் கூட நடப்பு வாரத்தில் இந்தியாவின் மின்சாரப் பற்றாக்குறை 1.40% அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு நிலவிய காலத்தில் கூட மின்சாரப் பற்றாக்குறை 1% ஆகவே இருந்தது. ஆனால், இப்போது அதை விட பற்றாக்குறை 40% அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே மின்தட்டுப்பாடு எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறது என்பதை உணர முடியும். இனி வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையும்.
» திருவள்ளுவர் பல்கலை. முறைகேடு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» மழையில் நனைந்து 70,000 நெல் மூட்டைகள் நாசம்: நிரந்தரத் தீர்வு எப்போது? - அன்புமணி கேள்வி
மின்சாரப் பற்றாக்குறை காரணமாக ஆந்திரா, மராட்டியம், குஜராத், பிகார், ஜார்க்கண்ட், ஹரியானா, உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் மின்வெட்டு இல்லை என்றாலும் கூட, கிராமப்பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. நிலைமையை மேம்படுத்தாவிட்டால், தமிழகத்திலும் மின்வெட்டு தீவிரமடையும்.
மின்னுற்பத்தியை அதிகரிப்பதற்கான கட்டமைப்புகள் நம்மிடம் இருந்தாலும், அது சாத்தியமாகாததற்கு காரணம், தேவையான அளவு நிலக்கரி கிடைக்காதது தான். மின்சாரத் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மின்னுற்பத்தி சாராத பிற தேவைகளுக்கான நிலக்கரி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்திருக்கிறது. மின்னுற்பத்திக்கான நிலக்கரி ஒதுக்கீட்டை 4.6% உயர்த்தி 56.50 கோடி டன்னாக மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. அதுவும் கூட போதுமானதல்ல என்பதால், நிலக்கரி இறக்குமதியை 3.6 கோடி டன்னாக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. அதுவும் போதாது என்பதே உண்மை நிலையாகும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 75% அனல் மின்நிலையங்களின் மூலமாகவே நிறைவேற்றப் படுகிறது என்பதால், நிலக்கரி உற்பத்தியில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே மின்சார வெட்டை தடுக்க முடியும். தமிழகமும் கடுமையான நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் உற்பத்தி 80% வரை பாதிக்கப்பட்டது. இப்போது நிலைமை மேம்பட்டுள்ள போதிலும், 4320 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட தமிழக அனல் மின் நிலையங்களில் அதிகபட்சமாக கடந்த 11-ஆம் தேதி மாலை 3255 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. இது போதுமானதல்ல. நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்தால் தமிழகத்தின் அனல் மின்சார உற்பத்தி மேலும் குறையும்; அதனால் மின்வெட்டு ஏற்படும்.
தமிழகம் அதன் மொத்த மின் தேவையில் 70 விழுக்காட்டை மத்திய அரசு நிறுவனங்களிடமிருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் தான் வாங்குகிறது. வாங்கப்படும் மின்சாரம் பெரும்பாலும் அனல் மின்சாரம் தான் என்பதால், நிலக்கரி பற்றாக்குறை அதிகரித்தால், பிற மாநிலங்களில் இருந்து வாங்கப் படும் மின்சாரமும் குறையும். அதனால், தமிழகம் இருளில் மூழ்கும் ஆபத்து அதிகரிக்கக்கூடும்.
அனல் மின் நிலையங்களில் 24 நாட்களுக்கான நிலக்கரி இருக்க வேண்டிய நிலையில், 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டும் தான் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கூடுதல் கப்பல்கள் மற்றும் தொடர்வண்டிப் பெட்டிகளை ஏற்பாடு செய்து அதிக அளவிலான நிலக்கரியை கொண்டு வருவது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது ஆகியவற்றின் மூலமாகத் தான் நிலைமையை சமாளிக்க முடியும். அடுத்த மாதம் முதல் காற்றாலை மின்னுற்பத்தி தொடங்கும் என்பதால் அதை முழுமையாக தமிழகமே கொள்முதல் செய்ய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தை மின்வெட்டிலிருந்து காக்க வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago