சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்ஜாமீன் கோரி பேராசியர்கள் மனு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வேதியியல் துறை பேராசிரியர்கள் இருவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேற்கு வங்கத்தை சேர்ந்த கிங்சோவிற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பிஎச்டி, படித்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த அந்த மாணவி ஐஐடி விடுதியில் தங்கி படித்து வந்தார். இதனிடையே, தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். மாணவியின் புகாரின் அடிப்படையில் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், சென்னை ஐஐடி வேதியியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் ஜி.எடமன பிரசாத், ரமேஷ் எல். கர்தாஸ் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், புகார் அளித்த பெண் அவருடன் படித்த சக மாணவர்களுடன் ஓய்வு நாட்களில் ஒன்றாக பயணித்துள்ளார். கடந்த 2020-ல் நிர்வாகத்திடம் பெண் அளித்த புகாரில் ஆதாராங்கள் இல்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதால் இரண்டு மாணவர்களும் வளாகத்திற்கு வெளியே தங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. நிர்வாகத்திடம் அளித்த புகாரில் தங்கள் இருவரின் பெயர்கள் சேர்க்கப்படாத நிலையில், முதல் தகவல் அறிக்கையில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

காவல்துறை மனு: இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான கிங்சோ தேப்வர்மனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவருக்கு 2021 டிசம்பர் மாதம் வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு குறித்து கிங்சோ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE