சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை வழக்கம்போல திறந்து வழிபாடு, விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்டபத்துக்குள் செல்லும் யாரும் தடுக்கப்பட மாட்டார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் ஆரியகவுடா சாலையில் ஸ்ரீராம் சமாஜ் என்றதனியார் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த அயோத்தியா மண்டபத்துக்குள் உண்டியல் வைத்து பொதுமக்களிடம் பணம் வசூலித்து, அதை சொந்த நலனுக்கு பயன்படுத்துவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், அயோத்தியா மண்டபத்தை கோயில் என்று கூறி அறநிலையத் துறை கடந்த 2013டிச.31-ம் தேதி முதல் அதை தனதுகட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலரை அதன் தக்காராகவும் நியமித்தது.
இதை எதிர்த்து ராம் சமாஜ் அமைப்பின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, கடந்த மார்ச் 17-ம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியதாவது:
மனுதாரர் தரப்பு, இது கோயில் கிடையாது, தனியார் மண்டபம் என்றும், ஆகம விதிகளின்படி இங்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. ராமநவமியன்று சுவாமிகளின் புகைப்படங்கள் மட்டுமே வைத்து அங்கு வழிபாடு செய்யப்படுவதாகவும் வாதிட்டுள்ளது.
ஆனால் அரசு தரப்பில், அங்கு சுவாமி சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருவதாகவும், பூஜைக்குபொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு, துளசி தீர்த்தம் கொடுக்கப்படுவதாகவும், உண்டியல் வைத்து பணம் வசூலிப்பதாகவும் வாதிடப்பட்டுள்ளது.
எனவே அது கோயிலா, தனியார் மண்டபமா என்ற கேள்விக்கு இந்த வழக்கின் மூலம் தீர்வு காண முடியாது. எனவே மனுதாரர் சம்பந்தப்பட்ட அமைப்பில் முறையிட்டு பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.
இவ்வாறு கூறிய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ராம் சமாஜ் அமைப்பின் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது:
எங்களது ராம் சமாஜ் அமைப்பு, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் 1958-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு 700-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களால் லாபநோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் செயலாற்றி வருகிறது.
இங்கு கலை, கலாச்சாரம், சமயம் தொடர்பான பல்வேறு ஆன்மிகக் கூட்டங்களும், திருமணங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ராமநவமியை முன்னிட்டு ராமபிரான், லட்சுமணன், சீதாதேவி, ஹனுமனின் பெரிய அளவிலான புகைப்படங்கள் வைக்கப்பட்டு ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அன்னதானம், பஜனைகள், ஆன்மிகசொற்பொழிவு, சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, பிரதோஷம் போன்ற தினங்களில் சிறப்பு யாகங்கள், ஹோமங்களும் இங்கு நடத்தப்படுகின்றன.
எங்கள் அமைப்பு மூலமாக சீதாராமா வித்யாலயா என்ற மேல்நிலைப் பள்ளியும், இறுதிச் சடங்குகள் செய்வதற்கான ‘ஞானவாபி’ என்ற கட்டிடமும், சாதி,சமய வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு ஏழை, எளியோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அயோத்தியா மண்டபத்தை கோயில் என்று கூறி அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தக்காரை நியமித்தது சட்டவிரோதம். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அறநிலையத் துறையினர் அயோத்தியா மண்டபத்துக்குள் நுழையவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்செல்வி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
ஸ்ரீராம் சமாஜ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன்: இந்த அமைப்பில் ஏற்கெனவே நிர்வாகிகளாக இருந்த ஒருசிலர் தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, அமைப்பின் மீது தவறான, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்த அமைப்பை அறநிலையத் துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
ராம் சமாஜ் என்பது தனியார் சங்கம். அயோத்தியா மண்டபம் என்பது கோயில் அல்ல. அறநிலையத் துறை அதிகாரிகள் இந்த தனியார் அமைப்புக்குள் நுழைய முற்பட்டதை எதிர்த்து போராடிய மூத்த குடிமக்களை போலீஸார் கைது செய்த சம்பவம், மேற்கு மாம்பலத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தவிர, திருமணத்துக்காக இந்த மண்டபம் ஏற்கெனவே புக்கிங் செய்யப்பட்டுள்ளதால், அங்கு வருபவர்களை தடுக்கக் கூடாது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம்: இதுதொடர்பாக அறநிலையத் துறை உதவி ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். அதன்படி அங்கு நேற்று தக்கார்பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போதுசட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
அயோத்தியா மண்டபத்தை வழக்கம்போல திறந்து வழிபாடு, விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்டபத்துக்குள் செல்லும் யாரும் தடுக்கப்பட மாட்டார்கள். அவர்களது பள்ளிக்கூடத்தை தொடவில்லை. திருமண மண்டபத்தையும் அவர்களே பயன்படுத்தலாம். இதுதொடர்பாக விரிவாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக அரசும், அறநிலையத் துறையும் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். அதுவரை இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago