தனியார் கல்லூரி ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 92 ஏக்கர் நிலம் அரசு துறைகளுக்கு ஒதுக்கப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்

சென்னை: "ஜேப்பியார் கல்லூரியின் ஆக்கிரமிப்பில் இருந்த 92 ஏக்கர் நிலம் உடனடியாக மீட்கப்பட்டது. இந்த நிலம் அரசின் உபயோகத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது. எந்தெந்த துறைக்கு இடம் தேவைப்படுகிறது என்பது குறித்து கேட்டுள்ளோம், விரைவில் அரசுத் துறைகளுக்கு நிலம் ஒதுக்கப்படும்" என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப்பணித்துறை) துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, "நகர்புறங்களில் அரசு நிலங்கள் கிடைப்பது என்பது அரிதாக இருக்கிறது. போலியாக பட்டா உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து அரசு நிலங்களை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க திமுக அரசு அரசாணை 64 வெளியிட்டுள்ளது. இதன்மூலம் எங்கெல்லாம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதோ, அவற்றை மீட்டு ரேஷன் கடைகள் கட்டவும், நகராட்சி அலுவலகம், மின்வாரிய அலுவலகம், நீர்த் தேக்க தொட்டிகள் கட்டுவதற்கு இடமில்லாத சூழலில் அவற்றை பயன்படுத்த வேண்டும். சத்யபாமா கல்லூரியில் இருந்து 90 ஏக்கர் நிலம் அரசால் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் அரசு நிலங்களை பல தனியார் கல்லூரிகள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்துள்ளனர். எனவே இதை மீட்டெடுக்க அரசு முன்வருமா" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், " சென்னையை சுற்றியிருக்கின்ற 4 மாவட்டங்களில், இதே போல போலி பட்டாக்கள், சம்பந்தமில்லாத பத்திரங்கள் எல்லாம் நீண்ட நெடிய காலமாக இருக்கிறது. எனவே எந்தெந்த இடங்களில் இதுபோன்ற நிலை என்பது குறித்து உறுப்பினர்கள் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

உதாரணமாக, ஜேப்பியார் கல்லூரியில் உள்ளதாக கூறியவுடன் அங்கிருந்த 92 ஏக்கர் நிலம் உடனடியாக மீட்கப்பட்டது. இந்த நிலம் அரசின் உபயோகத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது. எந்தெந்த துறைக்கு இடம் தேவைப்படுகிறது என்பது குறித்து கேட்டுள்ளோம். நிலத்தை அந்தந்த துறைகளுக்கு நாங்கள் ஒதுக்கி தரப்போகிறோம்.

எனவே இந்த இடத்தைப் போன்று முழுமையாக பெரிய இடங்களாக இருக்கிறது என்று உறுப்பினர்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உடனடியாக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பில் உள்ள சிறிய இடங்களை எல்லாம், அந்த இடத்தில் அரசாங்கத்துக்கு கட்டிடம் கட்டப்படும் தேவை ஏற்படும் நேரத்தில், அந்த இடங்களை காலி செய்து அரசாங்க கட்டிடங்கள் கட்டப்படும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE