திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவரை சாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ம.சுகுமாரை ஒன்றரை மாதத்துக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் நீலந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் மணி (71). இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த இவரை, அதே ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வந்த ம.சுகுமார், முன் விரோதம் காரணமாக கடந்த 10-01-2022-ம் தேதி சாதி பெயரை குறிப்பிட்டு திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து வேட்டவலம் காவல் நிலையத்தில் கடந்த 27-02-2022-ம் தேதி மணி புகார் கொடுத்துள்ளார்.
அதில், ''இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த நான், நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளேன். எனக்கு கல்வியறிவு இல்லை. ஆனாலும், என் மீது நம்பிக்கை வைத்து ஊராட்சி மன்ற தலைவராக கிராம மக்கள் தேந்தெடுத்துள்ளனர். நீலந்தாங்கல் ஊராட்சி செயலாளராக ம.சுகுமார் (பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்) பணியாற்றி வருகிறார். அவரது மனைவி அனுராதா, ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு வாக்களிக்கவில்லை என கூறி, எனது கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. மேலும் நிதி செலவு குறித்து எனக்கு எந்த விவரத்தையும் ஊராட்சி செயலாளர் சுகுமார் தெரிவிப்பதில்லை. இது குறித்து கேள்வி எழுப்பியபோது, சாதியின் பெயரை குறிப்பிட்டு, மிக ஆபாசமாக திட்டினார். மேலும், நீலந்தாங்கல் ஊராட்சியில் தான் வைத்ததுதான் சட்டம் என்றும், அடியாட்கள் மூலம் தீர்த்துகட்டி விடுவேன் எனவும் மிரட்டினார்.
இந்நிலையில், பொங்கல் செலவுக்கு பணம் எடுக்க வேண்டும் என கூறி ஊராட்சி காசோலையில் கையொப்பமிட வேண்டும் என கடந்த 10-01-22-ம் தேதி கட்டாயப்படுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்து, பணியாளர் ஊதியத்துக்கு மட்டுமே கையொப்பமிடுவேன் என கூறிவிட்டேன். அப்போது அவர், எனது வீட்டுக்குள் புகுந்து, சட்டையை பிடித்து அடித்தும், கழுத்தை நெரித்தும், கையொப்பமிடவில்லை என்றால், தொலைத்துவிடுவேன் என மிரட்டினார். அவரது செயலால் நான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன். எனது சாதியின் பெயரை கூறி திட்டி தாக்கிய ஊராட்சி செயலாளர் சுகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
» பத்திரிகை பதிப்பாசிரியர் வெங்கடபதி மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்
» திருப்பத்தூர் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள், 'சாசனக்கல்' கண்டெடுப்பு
அதன்பேரில், வேட்டவலம் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், ஊராட்சி செயலாளராக பணியாற்றிய சுகுமார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சியின் செல்வாக்கு மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவராக பதவி வகித்தல் காரணமாக, நடவடிக்கை எடுப்பதில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்றவுடன் புகார் கொடுக்கவும் விடாமல் ஊராட்சி மன்ற தலைவர் மணிக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், போராட்டங்களை முன்னெடுக்க பட்டியலின மற்றும் பழங்குடியின அமைப்புகள் முடிவு செய்திருந்தன. அதன் எதிரொலியாக ஒன்றரை மாதத்துக்கு பிறகு, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுகுமாரை வேட்டவலம் காவல்துறையினர் நேற்று (10-ம் தேதி) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சுகுமார், ஜமீன் கூடலூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். கூடுதல் பொறுப்பாக நீலந்தாங்கல் ஊராட்சி செயலாளர் பதவியிலும் நீடித்துள்ளார். ஊராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறி பெரியகல்லபாடி ஊராட்சி செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவர் புதிய பணியிடத்தில் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், சாதி மோதலை தூண்டும் வகையில் செயல்படுவதாக கூறி, சுகுமாரை ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago