'மாநில உரிமை, மொழி உரிமை காத்திட தொடர்ந்து பாடுபடுவோம்' - திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம். மாநில உரிமை - மொழி உரிமை காத்திட, கண்ணும் கருத்துமாக, தொடர்ந்து பாடுபடுவோம் என்று வலியுறுத்தி திமுக தலைவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளதாவது: "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

தமிழ்மொழி - தமிழ் மக்கள் – தமிழ்நாடு, இந்த மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற உன்னத இலட்சியத்துடன் உத்வேகமாகப் பயணிக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையில் பணிபுரியும் திராவிட முன்னேற்றக் கழக அரசு.

இருண்டு கிடந்த தமிழ்நாட்டிற்கு கடந்த மே மாதம் உதயசூரியனால் ஒளிபரவி விடியல் புலர்ந்தது. அதன் புதுவெளிச்சம் எல்லோருக்கும் பொதுவாகப் பரவிட வேண்டும், எல்லாத் துறைகளுமே ஒன்று போல முன்னேறிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆட்சி நிர்வாகம் சீராகச் செயல்பட்டு வருகிறது.

கடன் நெருக்கடி, பொருளாதாரச் சீரழிவு, தொழில் - உற்பத்தி பாதிப்பு எனக் கடந்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டுத் தோண்டிப் போட்டுவிட்டுப் போயிருக்கிற பள்ளங்களை நிரப்பி சமன்படுத்தும் வகையில், முனைப்பான முற்போக்கு செயல்பாடுகளை நிரல்படுத்தி மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் தொழில் முதலீடுகளை ஈர்க்கிறோம். அந்த வகையில்தான், 6,100 கோடி ரூபாய் தொழில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் துபாய், அபுதாபி பயணத்தின் போது வெற்றிகரமாக நிறைவேறின. அதன் முழுப் பலன்களும் விரைவில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திட இருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து, இந்திய மத்தியத் தலைநகராம் புதுடெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக அலுவலகமான ‘அண்ணா - கலைஞர் அறிவாலயம்’ திறப்புவிழா நிகழ்வு ஏப்ரல் 2 அன்று, அனைத்திந்திய கவனத்தை ஈர்த்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.

உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் உணர்வுப்பூர்வமாகத் தன்வயமாக்கிய உயர்வான விழா அது. டெல்லியின் சூழல் அறிந்து, மிகக் குறைந்த அளவில், கழக நிர்வாகிகள் அதில் பங்கேற்க நேர்ந்தாலும், கழகத் தொண்டர்கள் பலரும் நேரலையிலும் காணொலியிலும் அதனைக் கண்டு மகிழ்ந்து கொண்டாடியதை அறிவேன். டெல்லியில் உள்ள தி.மு.கழகத்தினரும், அங்குள்ள தமிழர்களும், பொதுமக்களும் எனக்கு அளித்த வரவேற்பில் இதயம் நிரம்பியது.

அண்ணா - கலைஞர் அறிவாலயத் திறப்பு விழாவில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், எளிமையாகவும் அதே நேரத்தில் ஏற்றத்துடனும் நிறைவேறிய விழா என்றும், அண்மைக் காலத்தில் தலைநகரில் எதிர்க்கட்சிகள் இப்படி ஒற்றுமையாக ஒருங்கிணைந்த ஒரு நிகழ்வைப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தனர். இத்தகைய ஒருங்கிணைப்பை தி.மு.கழகம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

டெல்லியின் திராவிடக் கோட்டையாம் அண்ணா - கலைஞர் அறிவாலயத் திறப்பு விழா என்பது, சமூகநீதியின் அடையாளச் சின்னமாக மட்டுமின்றி, தேசிய அளவில் மதச்சார்பற்ற - ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஒருபெரும் நோக்கில் ஒருங்கிணைத்திடும் அரிய நிகழ்வாக அனைவரது கருத்தையும் கவர்ந்தது.

தமிழ்நாட்டின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் பலரையும் நேரில் சந்தித்து, கோரிக்கைகளை அளித்து வலியுறுத்தியதுடன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ஆட்சி நிர்வாகத்தில் உள்ள மாதிரிப் பள்ளிகள், ஏழை - எளியோருக்கு உதவும் சிறிய மருத்துவமனைகள் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டுவிட்டு தமிழ்நாடு திரும்பினேன்.

பிற மாநிலங்களில் வியந்து பார்க்கும் அளவிலான திட்டங்களைப் போல, தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் வியந்து பார்த்துப் பாராட்டும் பல திட்டங்கள் உள்ளன. அவற்றில், இந்தியத் துணைக் கண்டத்திற்கே முன்னோடியான திட்டம்தான் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். பிறப்பிலேயே சாதி அடையாளத்தைச் சுமத்தி, காலம் காலமாக மனிதர்களைப் பிரித்து வைத்த சமூகக் கொடுமைகள் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் நீடிக்கக்கூடாது என்பதற்காக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அய்யன் திருவள்ளுவர் வகுத்த குறள்நெறியான ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அடிப்படையில், அனைத்துச் சாதியினரும் ஏற்றத்தாழ்வின்றி ஒரே இடத்தில் சுமுக மனப்பான்மையுடன் நட்புறவு பாராட்டி வசித்திடும் வகையில் 100 வீடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவைதான் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்.

நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் ஆட்சியின் மகத்தான திட்டமான சமத்துவபுரங்கள் பெரும்பாலானவற்றை அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் இருந்த உங்களில் ஒருவனான நான் நேரில் சென்று திறந்து வைத்தேன். புதிய சமத்துவபுரங்கள் அமைப்பதற்கான திட்டங்களும் தயாராயின. அப்படித்தான் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி மத்தியத்துக்குட்பட்ட பெரியகொழுவாரி கிராமத்தில் உருவாகி வந்த சமத்துவபுரம், கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கிடப்பில் போடப்பட்டு, வீணடிக்கப்பட்டது. மீண்டும் கழக ஆட்சி அமைந்த நிலையில், பத்தே மாதங்களில் சமத்துவபுரம் என்கிற முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையில் உருவான குழந்தை (brain child), பிரசவ நேரத்திற்குத் தயாராகியிருந்தது.

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் வழி காட்டுதலில் மிகச் சிறப்பான முறையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தன்னுடைய மாவட்டத்தில், தலைவர் கலைஞரின் திட்டத்தைச் செயல்படுத்துவதில் காட்டிய தனிப்பட்ட ஆர்வம் - அக்கறை, பெரியகொழுவாரி சமத்துவபுரத்தை அழகுற அமையச் செய்திருந்தது.

கடந்த ஏப்ரல் 5 அன்று, அதன் திறப்பு விழாவுக்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளும் திரண்டிருந்த மக்கள் கூட்டமும் மனநிறைவை அளித்தன. சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் அந்தந்த குடும்பத் தலைவிகள் பெயரிலேயே வழங்கப்படும் நிலையில், அவர்களைக் கொண்டே வீடுகளை ரிப்பன் வெட்டி, திறக்கச் செய்து, ‘இது உங்களுக்கான அரசு’ என்பதை அனைவர்க்கும் உணர்த்தும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.

சமத்துவபுரம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் லோட்டஸ் என்கிற காலணி தயாரிப்புத் தொழிற்சாலைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். பொதுவாக, ஒரு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா அல்லது தொடக்க விழா என்றால், அதன் நிர்வாகிகள் சார்ந்த விழாவாகவோ அல்லது ‘ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்’ போன்ற பிரம்மாண்டமான அரங்குகளில் நடைபெறுவதோ வழக்கமாக உள்ள நிலையில், இந்தத் தொழிற்சாலையை, பெருந்திரளாகத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் தொடங்கி வைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விழாவில் பேசும்போதே இதனைக் குறிப்பிட்டேன்.

மீண்டும் கழக ஆட்சி அமைந்ததிலிருந்து நான் அதிகம் பங்கேற்றது தொழிற்துறை சார்ந்த நிகழ்ச்சிகள்தான். அதிக முதலீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களைவிட, குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் பெரும் பயன் அளிக்கக்கூடியவை. அந்த வகையில், 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடியதாக அமைந்த இந்தக் காலணித் தொழிற்சாலை தொடக்க விழாவுக்காக செஞ்சியைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளும், விழா ஏற்பாடுகளை அவர் முன்னின்று செய்திருந்த விதமும் நெஞ்சில் நிறைந்திருக்கும் வகையில் அமைந்திருந்தன.

அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மக்கள் நலத் திட்டங்கள், ஒவ்வொன்றும் சாதனைகள் என்கிற வகையில் தொடர்ந்து செயலாற்றும் கழக அரசின் சார்பில் புதிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, கால வரையறைக்குள் செயல்படுத்தப்படுகின்றன. நான் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், மக்கள்நலப் பணியாளர்கள் வேலையின்றிப் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கவலை அடைவது வழக்கம். தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட மற்றொரு மகத்தான திட்டம்தான், மக்கள் நலப் பணியாளர்கள் பணியமர்த்தல். ஊரகப் பகுதிகளில் அவர்களுடைய பணி இன்றியமையாதது. பல்லாயிரம் குடும்பங்கள் வாழ்வு பெற்றன.

ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், மக்கள்நலப் பணியாளர்களின் வேலை பறிக்கப்படுவதும், தி.மு.கழகம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மீண்டும் அவர்களுக்கு வேலை வழங்குவதுமான நிலை மாறிமாறித் தொடர்ந்தது. தற்போது நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சினை இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், அவை தொடர்பான உத்தரவு விவரங்களை அறிந்து, சட்டரீதியான ஆலோசனைகளை மேற்கொண்டு, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது என்றும், தமிழ்நாட்டின் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் ‘வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்றும், அவர்களின் மதிப்பூதியத்தை 3000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்துவதுடன், மக்கள் நலப் பணியாளர்கள் கிராம ஊராட்சிப் பணிகளைக் கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து மாதம் 2000 ரூபாய் கூடுதலாக, மொத்தம் 7000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தேன்.

12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களை 10 ஆண்டுகளாகச் சூழ்ந்திருந்த இருளை அகற்றி, ஒளியேற்றிய மனநிறைவைப் பெற்றேன். இனி அவர்களின் வேலை பறிபோகும் வகையில், ஆட்சி மாற்றம் ஏற்பட தமிழ்நாட்டு மக்கள் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இதனை நிறைவேற்றியுள்ளேன். மக்கள் நலப் பணியாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் மன நெகிழ்ச்சியுடன் நன்றியினைத் தெரிவித்து வருவதை அறிகிறேன்.

எல்லாத் துறைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவது போலவே கலைத்துறை -ஊடகம் ஆகியவற்றின் நலனிலும் கழக அரசு நிரம்ப அக்கறை கொண்டுள்ளது. அதனடிப்படையில் ஏப்ரல் 9 அன்று தென்னிந்திய ஊடகம் மற்றும் (கலை) பொழுதுபோக்கு மாநாட்டினைத் தொடங்கி வைத்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கலைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அமையவில்லை. சென்னை வர்த்தக மையத்தில் இந்தியத் தொழில்கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் நான்கு மொழிகளைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இன்றைய தலைமுறையினர் மனதில் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறிப்பிட்டு, கஞ்சா - குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்துகளையும் முற்போக்குச் சிந்தனைகளையும் கொண்ட திரைப் படங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன்.

கலைத்துறை சார்ந்த இந்த நிகழ்வு முடிந்தவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமையான மாநிலமாகத் திகழும் கேரளாவுக்குப் பயணம் மேற்கொண்டேன். கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டுக் கருத்தரங்கில், மாநில உரிமைகள் குறித்துப் பேசுவதற்காக இந்தப் பயணம். கேரள அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கண்ணூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், ஆணையரும் தமிழர்கள். அதனால் அன்புக்குப் பஞ்சமில்லை. மலையாளம் பேசும் நிலப்பகுதியும் நம் தமிழ்நாட்டிற்கு நெருக்கமான நிலப்பகுதிதானே! அதனால் எல்லாரிடமும் அந்த அன்பு வெளிப்பட்டது.

நான் அங்கே தங்கியிருந்த விடுதிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் அருமைத் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களும் மிகுந்த பாசத்தை வெளிப்படுத்தினர். அங்கிருந்து, கருத்தரங்கத்திற்குச் செல்லும் வழியெங்கும் செங்கொடிகள் அழகுற அசைந்து, எனக்கு வரவேற்பளித்தன. அவற்றிற்கிடையே கழகத்தின் கறுப்பு-சிவப்புக் கொடியும் என்னை வரவேற்றது கண்டு மகிழ்ந்தேன். கேரள மாநில தி.மு.க. அமைப்பாளர் முருகேசன் இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக இந்த இரு இயக்கங்களும் மக்களின் விடுதலைக்காகவும்,உயர்வுக்காகவும் தொடர்ந்து உழைத்து வருவதையும், பல களங்களில் ஒன்றிணைந்து வெற்றி பெற்றிருப்பதை காற்று வெளியெங்கும் பரவிடச் செய்வது போல செங்கொடியும் கறுப்பு-சிவப்புக் கொடியும் பறந்து கொண்டிருந்தன. கறுப்பு எனும் இருட்டை விரட்டும் சூரியனாக சிவப்பு நிறம் இடம்பெற்றிருப்பதாகவும், அடிவானச் சூரியனின் சிவப்பு மெல்ல மெல்ல மேலே எழும்போது, கறுப்பு எனும் இருட்டு முழுவதுமாக மறைந்து, விடியலின் அடையாளமான சிவப்பு நிறைந்திருக்கும் என்று கழகக் கொடிக்கான காரணத்தை பேரறிஞர் அண்ணா கூறியது நினைவுக்கு வந்தது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளான கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் படங்கள் இடம்பெற்றிருக்கும். கழகத்தின் வரலாற்றிலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் பொறுப்பேற்றிருக்கிறேன். அந்தத் தலைவர்களுடன் என்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பெருமையடைபவன் அல்ல. அவர்களைப் போல சமுதாயத்திற்கு அனுதினமும் உழைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். மார்க்சிஸ்ட் மாநாட்டுக் கருத்தரங்கில் ‘ஸ்டாலின்’ பங்கேற்பதில் வியப்பில்லை. அது, ஒருமித்த சிந்தனையின் வெளிப்பாடு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழியாக வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்குப் பதில், இந்தி பேச வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது, நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளாகியிருந்தது. அவரது கருத்துக்கு, கண்டனக் குரலை உங்களில் ஒருவனான நான் உடனடியாக எழுப்பியிருந்த நிலையில், கண்ணூர் மாநாட்டில் கேரளாவில் தாய்மொழியான மலையாளத்திலும், அதன்பின் தொடர்ச்சியாக நம் தாய்மொழியான தமிழிலும், இறுதியாக ஆங்கிலத்தில் முழங்கியும், மாநில உரிமைகளுக்கான குரலை உயர்த்தினேன். இந்திய அளவில் மாநில உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு தேவை என்பதை எடுத்துரைத்தேன். பேரிடரை எதிர்கொள்வதிலும், மாநில உரிமைகளைக் காப்பதிலும், மக்களுக்கான நிர்வாகத்தை அளிப்பதிலும் எனக்கு முன்னோடியாக விளங்கும் கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் மீதான மதிப்பையும் அன்பையும் வெளிப்படுத்தினேன். இந்திய அரசியலின் மையமாக நான் திகழ்வதாக கேரள முதலமைச்சர் மனம் திறந்து எடுத்துரைத்தார்.

தமிழ்நாடுதான் என் தாயகம். தமிழ்நாட்டு மக்கள்தான் என்னை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கைக்குரியவனான என் கவனம் முதன்மை பெறுவது, தமிழ்நாட்டின் மீதுதான். தமிழ்நாட்டில் செயல்படுத்துகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தாக்கமும் வீச்சும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது. அதனை எடுத்துரைக்கும் வகையில், ஏப்ரல் 9 அன்று தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆகியோர் தமிழக பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பான முறையில் எடுத்துரைத்த கருத்துகளும், அது மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பதும் என் கவனத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டம் மிகச்சிறப்பாக நடந்ததாக அறிந்தேன். அந்த மாவட்டக் கழகத்திற்குச் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரளாவிலிருந்து திரும்பிய எனக்கு ஞாயிறன்றும் ஓய்வில்லை. ஞாயிறு எனும் சூரியன் போலவே ஒவ்வொரு நாளும் ஒளிவீசிடும் அளவில் ஓயாது உழைப்பதன்றி வேறு பணி ஏது? செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யச் சொன்னால், இலட்சக்கணக்கானோரைக் கூட்டி, ஒரு மகத்தான மாநாட்டையே நடத்திக் காட்டிவிட்டார் நமது தா.மோ.அன்பரசன் . அவருக்கும்’ அவருடன் இணைந்து பணிபுரிந்த உடன்பிறப்புகளுக்கும், அன்பு நிறைந்த வாழ்த்துகள்!

சொன்னதைச் செய்வதும், செய்வதைச் சொல்வதும் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்குத் தந்துள்ள ஆட்சிக்கான அடிப்படை இலக்கணம். அதன்படி, பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை மக்கள் முன் எடுத்துரைத்தேன். இன்று முதல் மீண்டும் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஒவ்வொன்றாகச் செய்கின்ற பணி தொடர்ந்து சீராக நிறைவேறும்.

தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம். மாநில உரிமை - மொழி உரிமை காத்திட, கண்ணும் கருத்துமாக, தொடர்ந்து பாடுபடுவோம். இந்திய மத்தியத்தில் எவராலும், சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை, வரலாறு ஏற்கும் வண்ணம், மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்