தாம்பரம் மாநகராட்சிக்கு பிரத்யேக இலச்சினை அறிமுகம் : இன்று நடைபெறும் மாமன்றத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்படும்

By பெ.ஜேம்ஸ்குமார்

தாம்பரம்: புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம்மாநகராட்சிக்கு என, தனி இலச்சினை (லோகோ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் இதுஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை புறநகர்ப் பகுதியை ஒட்டியுள்ள 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து புதிதாகத் தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. மொத்தம் 70 வார்டுகள் வரையறை செய்யப்பட்டன. இதன் பரப்பளவு 87.64 சதுர கி.மீ. சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மாநகராட்சி முதல் மேயராகவசந்தகுமாரி, துணை மேயராக காமராஜர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் இன்று (ஏப். 11) கூடுகிறது. இதில் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, பாதாளச் சாக்கடை திட்டம் உள்ளிட்ட, 180-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் மன்றப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. இதில் முக்கிய பொருளாகத் தாம்பரம் மாநகராட்சிக்கு எனத் தனி இலச்சினை (லோகோ) அறிமுகம் செய்து மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்த இலச்சினையில் தாம்பரத்தில் செயல்படும் இந்திய விமானப்படை பயிற்சி மையம், 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில், மூன்றாவது முனையம் அந்தஸ்து பெற்றதாம்பரம் ரயில் நிலையம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படித்த எம்.ஐ.டி. கல்லூரி போன்றவை இடம்பெற்றுள்ளன. ஆன்மிகம், படிப்பு, போக்குவரத்து, வீரம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இந்த இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட திருநீர்மலை கோயில், 108 திவ்ய தேசங்களில் 61-வது ஸ்தலமாகும். இத்தலம்11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஸ்தலமாக விளங்குவதுடன், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார்களால் பாடல் பெற்ற தலமாகும்.இங்கு நீர்வண்ணப் பெருமாள் (நின்ற நிலை), ரங்கநாதப் பெருமாள்(கிடந்த நிலை), உலகளந்த பெருமாள்(நடந்த நிலை), சாந்தநரசிம்மர் (இருந்த நிலை) என 4கோலங்களில் சுவாமி அருள்பாலிக்கிறார்.

உலக அளவில் போற்றப்படும் நமது இந்திய நாட்டின் ராணுவ வானூர்தி இயக்கும் பயிற்சி, தொழிற் பயிற்சி, தள பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளும் தாம்பரம் விமானப் படை மையம் உள்ளது. இது 1932-ம்ஆண்டு, 'இந்தியன் ராயல் ஏர்போர்ஸ்' என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர், 1962-ம் ஆண்டு, தாம்பரம் விமானப்படை பயிற்சி மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எம்.ஐ.டி. கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு கிளை கல்லூரியாக, 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இஸ்ரோ குழும நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்த சிவன் ஆகியோர் பயின்ற கல்லூரி என்ற பெருமையும் இக்கல்லூரிக்கு உண்டு.

தாம்பரம் ரயில் நிலையம் இந்திய ரயில்வே துறையில் தென்னிந்திய அளவில் முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது. இது, 1931-ம் ஆண்டு நிறுவப்பட்ட ரயில் நிலையம். இந்நிலையத்தின் வழியாக பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் ரயில்கள் இயக்கப்படுவதுடன், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் சென்னைக்கு மின்சார ரயில் வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது போன்ற தாம்பரத்தில் உள்ள முக்கிய பகுதிகளின் பெருமைகளை அடக்கிய இலச்சினை தாம்பரம் மாநகராட்சிக்கு ௭ன தயாரிக்கப்பட்டுள்ளது. இது மாமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் அளித்தவுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE