போக்குவரத்து பிரச்சினைகளை அதிகப்படுத்தும் வகையிலும், தரமான குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாகவும் பரிதாபமாக காட்சியளிக்கிறது பாளையங்கோட் டையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட பேருந்துநிலையம். மாநகர போக்குவரத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாத வண்ணம் கோடிக்கணக்கான ரூபாய்களை வீணடிப்பது தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நோக்கமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பலகோடி ரூபாய் மதிப்பில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையங்களை கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி சென்னை யிலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பாளையங்கோட்டையில் ரூ.13.08 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதையொட்டி வணிக வளாக கட்டுமானங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பேருந்து நிறுத்தமாக சுருங்கியது
பாளையங்கோட்டையில் ஏற்கெனவே விசாலமாக பல பேருந்துகள் வந்து செல்லும் வண்ணம் இருந்த பேருந்து நிலைய த்தை இடித்து விட்டு தற்போது வெறுமனே ஓரிரு பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் பேருந்து நிறுத்தமாக சுருக்கியிருப்பதும், தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போல் வணிக வளாக கட்டுமானங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து பேருந்து நிலையத்தின் தோற்றத்தை பயனற்றதாகமாற்றியிருப்பதும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் பலகோடி செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் சில மாதங்களிலேயே பரிதாப நிலைக்கு மாறியிருப்பது சமூக ஆர்வலர்களை வேதனை அடைய வைத்துள்ளது.
தரமான குப்பைத் தொட்டிகளை வைக்காமல் தரமற்ற பெரிய அளவிலான பிளாஸ்டிக் பக்கெட்டுகளை வாங்கி, பேருந்து நிலையத்துக்குள் இருக்கும் தூண்களில் கயிறுகளால் கட்டி வைத்துள்ளனர். தினமும் நிரம்பும் இந்த குப்பை தொட்டிகளை உணவு தேடி அலையும் நாய்கள் இழுத்து கீழே சாய்ப்பதும், குப்பைகள் ஆங்காங்கே சிதறி சுகாதார சீர்கேடு நிலவுவதும் வாடிக்கையாகிவிட்டது.
பலகோடி ரூபாய் செலவு செய்தும் குப்பைத் தொட்டியை தரமாக வைக்காதது குறித்து பயணிகள் நகைக்கிறார்கள். இங்கு போடப்பட்டுள்ள ஸ்டீல் இருக்கைகள் இப்போதே வளைந்து சேதமடைந்து வருகின்றன. பேருந்துகளுக்காக பயணிகள் காத்திருக்கும் பகுதியில் குறைந்த இடமே விடப்பட்டுள்ளதால் மாலை வேளைகளில் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரால் பேருந்து நிலையம் மூச்சுத்திணறுகிறது. ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து அரசு, தனியார் பேருந்துகள் 5-க்கு மேல்வந்து நின்றாலே திருவனந்தபுரம் சாலையிலும், எதிரே ஹைகிரவுண்ட் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசல் தீரவில்லை
இத்தனைக்கும் நகர பேருந்துகள் மட்டுமே இப்பேருந்து நிலையத்தினுள் சென்று வருகின்றன. தூத்துக்குடி, திருச்செந்தூர் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்தினுள் வராமல் போக்குவரத்து சிக்னல் வழியாக வெளிப்புறமாகவே இயக்கப் படுகின்றன. இப்பேருந்துகள் பேருந்து நிலையத்தின் வடபுறமுள்ள ஹைகிரவுண்ட் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால், சிக்னல் பகுதியில் மட்டுமின்றி ஹைகிரவுண்ட் சாலை, ஏஆர் லைன் செல்லும் சாலைகளில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள், வாகன ஓட்டிகளின் கோரிக்கை.
சரிவர திட்டமிடாமல் கட்டி, விஸ்தீரணமாக இருந்த பேருந்து நிலையத்தை வெறும் பேருந்து நிறுத்தமாக சுருக்கி, வணிகத்துக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு வரலாற்று பிழையை செய்து விட்டதாக மாநகர மக்களும், பயணிகளும் வேதனை தெரிவிக் கிறார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago