புதுக்கோட்டை | டாஸ்மாக் கடையை மூடக் கோரி பாஜக, இடதுசாரி ஒன்றிணைந்து போராட்டம்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: எதிரும் புதிருமான கொள்கைகளை உடைய இடதுசாரிகளும், பாஜகவினரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரிய போராட்டத்தை இன்று ஒன்றிணைந்து நடத்தியுள்ளனர்.

ஆலங்குடி பழைய நீதிமன்றம் அருகே ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையும், அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையும் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில், மேலும் ஒரு கடை திறப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிதாக தொடங்க உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோர் அண்மையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு, வட்டாட்சியர் செந்தில் நாயகி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, இன்று ஆலங்குடியில் 2 டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ, நாம் தமிழர் கட்சியினருடன் பாஜகவினரும் கொடிகளை பிடித்துக்கொண்டு டாஸ்மாக் மதுபானக் கடை அருகே திரண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர், போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில் நாயகி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.

அப்போது, புதிய கடையை திறப்பதில்லை என்றும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் 2 கடைகளையும் 3 மாதங்களுக்குள் அகற்றிக் கொள்ளப்படும் என்றும் அலுவலர்கள் உறுதி அளித்தனர். கொள்கை அடிப்படையில் இடதுசாரிகளும், பாஜகவினரும் எதிரும், புதிருமாக இருப்பதால் நாடு முழுவதும் ஒருவரையொருவர் விமர்சித்து வரும் நிலையில், ஆலங்குடியில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியது அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE