உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப்.24-ல் புதுச்சேரி வருகை: ஆளுநர் தமிழிசை தகவல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 24 ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளார் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

உலக சுகாதார தினத்தையொட்டி, இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) புதுச்சேரி கிளை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி இன்று(ஏப். 9) நடைபெற்றது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை கூறியதாவது: "உடல் நலத்தையும் மன நலத்தையும் பேண வேண்டியது மிகவும் அவசியம். உடல்நலம் என்ற அஸ்திவாரத்தின் மேல் தான் சாதனை என்கிற கட்டிடத்தை எழுப்ப முடியும். அதனால் அனைவரும் காலை எழுந்தவுடன் உடல் நலத்தை பேணுவதற்கான யோகா, தியானம் போன்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்." என்று கூறினார்.

மேலும், செய்தியாளர்களை சந்திப்பில் ஆளுநர் தமிழிசை, "பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி. இருவரும் புதுச்சேரி மீது மிகுந்த அக்கறையும், ஆர்வமும் கொண்டுள்ளனர். பிரதமர் புதுச்சேரி வளர்ச்சிக்காக பக்கப்பலமாக இருப்பதாக உறுதி அளித்துள்ளார். பல திட்டங்களைக் கொண்டு வருவதற்கும் பிரதமர் ஊக்கமாகவும், உறுதுணையாகவும் இருக்கிறார்.

புதுச்சேரியில் நடைபெறும் பொதுவிழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 24 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகிறார். மத்திய நிதியமைச்சர், ரயில்வே அமைச்சர் ஆகியோரையும் புதுச்சேரி வளர்ச்சிக்காக சென்று பார்த்தேன். டெல்லிக்கு, முதல்வரை தவிர்த்துவிட்டு சென்றதாக நினைக்க வேண்டாம். இதுபற்றி முதல்வரிடமும் ஆலோசித்தேன். நாங்கள் இணைந்துதான் செயல்பட்டு வருகின்றோம். புதுச்சேரி மக்களுக்காக மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பு புதுச்சேரிக்கு பல திட்டங்களை கொண்டுவருவதற்கு உதவியாக இருக்கும்.

மாநில நிதிநிலைமையை அதிகரிப்பதற்கும், புதிய திட்டங்களைக் கொண்டுவருவதற்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் பல திட்டங்கள் இருக்கிறது. நிச்சயமாக புதுச்சேரி மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒவ்வொரு தினமும் புதுச்சேரி வளர்ச்சிக்கு பல புதிய திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.

புதுச்சேரியில் உள்ள ஒவ்வொருவரும் இன்று பெருமைப்படலாம். ஏனென்றால் கரோனாவே இல்லாத மாநிலங்களில் திரிபுராவுக்கு அடுத்தப்படியாக புதுச்சேரி உள்ளது. அதனால் புதுச்சேரி மக்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். மக்களின் தொடர் முயற்சியாலும், பாதுகாப்பு நடவடிக்கையாலும் இத்தகைய நிலை உள்ளது. தனி மனித இடைவெளி, கைககளைக் கழுவுவது, முகக்கவசம் அணிவது என்பது அவரவர் விருப்பம். சிறிது நாட்களுக்கு இது தொடர்வது நல்லது."என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE