சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை பேணிக்காத்து கல்வியை திறம்பட கற்றிட ஏதுவாக சென்னையில் 23 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மேலும் பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், "சென்னை பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் காலையில் சிற்றுண்டிகள் கிடைக்காத நிலையில் வகுப்பில் சோர்வு நிலையில் உள்ளதால் கல்வி கற்பதில் தொய்வு ஏற்படுவதை நீக்கும் பொருட்டு காலைச் சிற்றுண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. சென்னை பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை பேணிக் காத்து கல்வியை திறம்பட கற்றிட, திருவான்மியூரை சுற்றியுள்ள 23 சென்னைப் பள்ளிகளில் சுமார் 5,000 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் தன்னார்வலர்கள் மூலம் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. காலை சிற்றுண்டி திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால், மேலும் பல பள்ளிகளில் தன்னார்வலர்களின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது" என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளுக்குப் பின் தாக்கலான பட்ஜெட்: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலானது.

அண்மையில் தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது என்பதால், 6 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக 153 வார்டிலும், அதிமுக 15 வார்டிலும் வெற்றி பெற்றது. அதேபோல் காங்கிரஸ் 13 வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சி தலா 4 வார்டிலும், மதிமுக. 2 வார்டிலும், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாஜக, அமமுக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.

இநிந்லையில் இன்று (ஏப்ரல் 9) சரியாக காலை 10 மணியளவில் மேயர் ஆர்.பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முன்னதாக சொத்து வரி உயர்வு குறித்து பேச அனுமதி கோரி அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பினர். பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நேரம் வழங்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் அனுமதி கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் மாநகராட்சி மாமன்றத்திலிருந்து அவர்கள் வெளியேறினர்.

பட்ஜெட் துளிகள்: > சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த பாலினக் குழுக்கள் அமைக்கப்படும்.

> சென்னையில் 23 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

> 70 பள்ளிகளில் இணைய இணைப்பு வழங்க ரூ.1.86 கோடி ஒதுக்கீடூ செய்யப்படும்.

> 281 மாநகராட்சி பள்ளிகளில் 40 லட்சம் செலவில் கல்விக் கண்காட்சிகள் நடத்தப்படும்.

> 72 லட்சம் மாணவர்களுக்கு 7.50 கோடி செலவில் சீருடை வழங்கப்படும்.

> நிர்யயா நிதி மூலம் 23.66 கோடியில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

> பள்ளிகளில் 5.47 கோடியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்.

இவ்வாறாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE