கோயில்களில் ஏப்.11-ம் தேதி முதல் மின்னணு முறையில் சேவைக் கட்டண சீட்டுகள்: அறநிலையத் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கோயில்களில் பக்தர்களுக்கான சேவை கட்டணச் சீட்டுகள் வரும் 11-ம் தேதி முதல் மின்னணு முறையில் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித் துள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோயில்களில் வாடகைதாரர்கள், குத்தகைதாரர்களுக்கு கேட்பு வசூல்ரசீது பல்வேறு நிலைகளில் வழங்கப்பட்டு வந்தது. அதை தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஒரேசீராகவும், வெளிப்படைத் தன்மையுடனும் வழங்கும் வகையில் மின்னணு முறையில் கட்டணச் சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோயில்களில், வரும்11-ம் தேதி முதல் இணைய வழியிலும்,சீட்டு விற்பனை மையங்களில் கணினிமூலமாகவும் மட்டுமே அனைத்து கட்டணச் சீட்டுகளும் வழங்கப்பட வேண்டும் என்று இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த கோயில் பெயரிலேயே ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். சீட்டு விற்பனை மையங்களில் கணினி வழியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கட்டணத்தை இணையவழியில் செலுத்துவதை திறம்பட கண்காணிக்க வேண்டும். இணைய வழி பதிவை கோயில்கள் ஊக்குவிக்க வேண்டும்.

‘கோயில்களில் அனைத்து வகையான சேவைகளுக்கும் கணினி வழி ரசீது அளிக்கப்படும்’ என்ற அறிவிப்பு பலகையை, பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.

கோயில்களில் ரொக்கமாக வசூலாகும் தொகையை, அடுத்த வங்கி வேலை நாளில் கோயில் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அனைத்து விதமான சேவைகுறித்த விவரங்களையும் விடுபடாமல் மென்பொருளில் பதிவேற்ற வேண்டும். இதை நடைமுறைப்படுத்த கணினி, பிரின்ட்டர் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வருங்காலத்தில், கோயில்களில் கையால் எழுதும் ரசீது முறை நீக்கப்பட்டு, அனைத்து கட்டணச் சீட்டுகளும் கணினி வழியாக மட்டுமே வழங்கப்படும். இதனால், கோயில்களில் தினசரி நடைபெறும் சேவைகளை பக்தர்கள் எளிதில் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE