மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவர்கள் வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்தப்படுவர் என்றும், மதிப்பூதியம் ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘அதிமுக அரசு கொண்டு வந்த அம்மா மினி கிளினிக்கை திமுக அரசு முடக்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நெடுந்தொலைவு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘‘மக்கள் யாரும் நெடுந்தொலைவு சென்று சிரமப்படவில்லை. முதல்வர் தொடங்கிவைத்த ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மூலம், அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்றார்.

அப்போது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் பயன்படுத்தப்படுவதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார். அதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஊரகப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், கிராம பொதுச் சொத்துகளை பேணிக் காத்தல், சிறு சேமிப்புத் திட்டத்துக்கு உதவுதல் போன்ற கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1989-ம் ஆண்டு ஒரு ஊராட்சிக்கு தலா ஒரு ஆண், பெண் என்ற அடிப்படையில் மொத்தம் 12,617 ஊராட்சிகளுக்கு 25,234 மக்கள் நலப் பணியாளர்களை நியமனம் செய்தார். 1991-ம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளர்கள் என்ற பணியை ரத்து செய்தது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பிறகு, 1997-ம் ஆண்டு இந்தப் பணியிடங்கள் மறுபடியும் தோற்றுவிக்கப்பட்டன. 2001-ல் அதிமுக அரசு அமைந்ததும் மீண்டும் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதன்பிறகு 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மக்கள் நலப் பணியாளர் பணியிடங்களை தோற்றுவித்து, ஊராட்சிக்கு ஒருவர் என 12,618 மக்கள் பேரை அப்போதைய முதல்வர் கருணாநிதி நியமித்தார்.

இறுதியாக 2011-ம் ஆண்டிலும் அன்றைய அதிமுக அரசால் இப்பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன. எப்போதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மக்கள் நலப் பணியாளர் பணியிடங்களை ரத்து செய்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மீண்டும் அவர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதுதான் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது.

மக்கள் நலப் பணியாளர்கள் சார்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இறுதியாக மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பணி நியமனம் வழங்க உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு 2014 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 2017-ம் ஆண்டு, இந்த சிறப்பு விடுப்பு மனுக்கள் சிவில் மேல்முறையீட்டு வழக்குகளாக மாற்றப்பட்டு, கடைசியாக இந்த ஆண்டு பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை கருத்தில்கொண்டு, இந்த அரசு பொறுப்பேற்றவுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. நிலுவையில் உள்ள வழக்கில், தீர்ப்புக்கு உட்பட்டு நீதிமன்ற ஆணைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதனடிப்படையில், மொத்தமுள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் ‘வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்’ என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, இப்பணி வாய்ப்பு வழங்கப்படும்.

இந்தப் பணிக்கென ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தியும், மக்கள் நலப் பணியாளர்கள் ஏற்கெனவே கிராம ஊராட்சிப் பணிகளில் பணியாற்றியதை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு கிராம ஊராட்சிப் பணிகளை கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து, அதற்கென மாநில நிதிக் குழு மானியத்தில் இருந்து மாதம் ரூ.2,500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 10 ஆண்டு காலத்தில், உயிரிழந்த மக்கள் நலப் பணியாளர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு, அவர்கள் விரும்பினால், அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்