'பதவி நிலைக்க நீட் தேர்வை நுழையவிட்டார்கள்' - அதிமுகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் பேசிய அவர், "என்ன தான் நான் இன்றைக்கு தமிழகத்திற்கே முதலமைச்சராக இருந்தாலும் கொளத்தூர் தொகுதி என்று வருகிறபோது எனக்கு ஒரு உணர்வு, ஒரு பாசம், ஒரு அன்பு தானாகவே வந்துவிடுகிறது.

ஆகவே, தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், என்னைத் தேர்ந்தெடுத்து, என்னைத் தொடர்ந்து இந்த தொகுதியிலிருந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கக்கூடிய மக்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் எனக்கு அதிகமாக இருந்து வருகிறது. ஆகவே அந்த ஆவலோடு வந்திருக்கிறேன். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்பது எப்படி உருவாக்கப்பட்டது. ஏன் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன். இருந்தாலும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீட் என்ற ஒரு கொடுமையான சூழ்நிலையை ஏற்படுத்தி அதிலே படித்து வெற்றி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

கருணாநிதி முதல்வராக இருந்தவரையில் நீட் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தவரையிலே, அந்த நீட் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடவில்லை. ஆனால் அவருடைய மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள், எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. காரணம், அவருடைய பதவி நிலைக்க வேண்டும். ஆகவே தன்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை ஏற்றுக்கொண்டு நீட்டை தமிழ்நாட்டிற்குள் நுழையவிட்டார்கள்.

அதனால்தான் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய நம்முடைய மாணவர்கள் அதிகமான மதிப்பெண்ணைப் பெற்று தேர்வில் வெற்றிபெற்றாலும், நீட்டிலே வெற்றி பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டது. அரியலூர் பகுதியைச்சார்ந்த தாழ்த்தப்பட்டக் குடும்பத்தில் பிறந்த அனிதா நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தவர் தான். அவர் இந்த நீட் தேர்விலே வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டு மாண்டார். அவருடைய நினைவாகத்தான் கொளத்தூர் தொகுதியிலே அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என தொடங்கி மாணவர்களுக்கு முறையான பயிற்சியை வழங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொளத்தூரில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா தொகுதிக்கும் இதை கொண்டு வரவேண்டும் என்று நான் அடிக்கடி சொன்னதுண்டு.

எதிர்க்கட்சியாக இருந்தபொழுது நான் இந்தப் பணியை மேற்கொண்டு இதில் வெற்றியைப் பெற்றேன். எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது நன்றாக கவனிக்க வேண்டும். அப்போது நாம் ஆட்சியில் இல்லை. ஆனால் இப்பொழுது ஆட்சிக்கு வந்த பிறகு நான் எதிர்க்கட்சியாக இருந்து தொடங்கிய பணி தான், இன்று "நான் முதல்வன்" என்ற அந்த பெயரிலே ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறேன்.

“நான் முதல்வன்”, நான் மட்டுமல்ல, எல்லோரும் முதல்வன், இங்கே இருக்கக்கூடிய அத்தனை பேரும் முதல்வனாக வரவேண்டும். எல்லாவற்றிலும் முதல்வனாக வரவேண்டும். ஆட்சியில் மட்டுமல்ல, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், எல்லாத் துறைகளிலும் முதல்வனாக வரவேண்டும் என்பதற்காகத்தான் “நான் முதல்வன்” என்ற பெயர் சூட்டி, அந்தத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும், இன்னும் வெளிப்படையாக சொன்னால், “நான் முதல்வன்” என்கிற திட்டத்தைத் தொடங்குவதற்கு மூலகாரணமே இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தான் என்பதை பெருமையோடு சொல்கிறேன்.

இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் இருக்கக்கூடிய எல்லாத் துறைகளையுமே அதில் ஈடுபடுத்தி, “நான் முதல்வன்” என்ற திட்டத்தை நடத்தக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இன்று இளம்பெண்கள் 152 பேர்கள், இளைஞர்கள் 71 பேர்கள், 64 மடிக்கணினியும், சான்றிதழ்களும் பெற இருக்கிறார்கள். மடிக்கணினியும், சான்றிதழ்களும் பெற இருக்கக்கூடிய அத்தனை பேரையும் நான் இந்தத் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வராக மட்டுமல்ல, எல்லாத்தையும் விட உங்களில் ஒருவனாக அத்தனை பேரையும் நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மானியக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே, நாளை, நாளை மறுநாள் விடுமுறையாக இருந்தாலும், நாளையதினம் நான் கேரள மாநிலத்திற்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக செல்கிறேன்" என்று பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்