ரூ.1,856.83 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள் | நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை - 56 முக்கிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.1856.83 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்; பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் மர நடைபாதை அமைக்கப்படும் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடைத் திட்டங்கள், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், பேருந்து நிலையங்கள் அமைத்தல், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து, 56 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:

> குடிநீர் திட்டப் பணிகள்: மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.1856.83 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

> 100 சதவீத பாதாளச் சாக்கடைத் திட்டம் விரிவுபடுத்துதல்: திருப்பூர், வேலூர், திண்டுக்கல், நாகர்கோவில், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் ஆவடி ஆகிய மாநகராட்சிகள், காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், தேனி - அல்லிநகரம், மயிலாடுதுறை, திருவாரூர், பழனி, திருவேற்காடு, மாங்காடு மற்றும் பூந்தமல்லி ஆகிய நகராட்சிகளில் விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

> கசடுகழிவு மேலாண்மைத் திட்டங்கள்: மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 36 நகரங்களில் கசடு கழிவு மேலாண்மை செயலாக்கத்திற்கு ரூ.87 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்படும்.

> மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குளங்கள் சீரமைப்பு பணிகள்: நடப்பாண்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 100 குளங்கள் ரூ.75 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சிகளில் 112 நீர்நிலைகள் ரூ.62.53 கோடி மதிப்பீட்டிலும் சீரமைக்கப்படும்.

> நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல்: அனைத்து நகர்புற உள்ளாட்சிகளிலும் ஒரு நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையினை கருத்திற்கொண்டு நடப்பாண்டில், சென்னை மாநகராட்சியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 20 தகன மேடைகள் எரிவாயு தகன மேடைகளாக மாற்றப்பட்டு மயானபூமிகள் மேம்படுத்தப்படும். பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.67.50 கோடி மதிப்பீட்டில் 35 புதிய நவீன தகன மேடைகள் அமைக்கப்படும். மேலும், ரூ.10 கோடி மதிப்பீட்டில் 20 தகன மேடைகள் புதுப்பிக்கப்படும். பேரூராட்சிகளில் 50 மின் மயானங்கள் ரூ.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> அனைத்து கட்டமைப்புகளுடன் பேருந்து நிலையங்கள் அமைத்தல்: சென்னை மாநகராட்சியில் பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

திருப்பூர், ஒசூர் ஆகிய மாநகராட்சிகள், திருவள்ளூர், வடலூர், சிதம்பரம், பேர்ணாம்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், லால்குடி, துறையூர், அரியலூர், பொள்ளாச்சி, ஆற்காடு, மேலூர், உசிலம்பட்டி, கூடலூர், ராமநாதபுரம், திருச்செந்தூர், சாத்தூர், குளச்சல், மேட்டூர், எடப்பாடி ஆகிய நகராட்சிகளிலும் மற்றும் சாயர்புரம், திருவட்டாறு ஆகிய பேரூராட்சிகளிலும் 24 புதிய பேருந்து நிலையங்கள் ரூ.302.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மேலும், மதுரை மாநகராட்சி, சிதம்பரம், வாலாஜாபேட்டை, கூத்தாநல்லூர், முசிறி, ஜெயங்கொண்டம், கோபிசெட்டிபாளையம், தேவக்கோட்டை, மானாமதுரை, பழனி, கொடைக்கானல், ராமேஸ்வரம், பெரியகுளம், களக்காடு, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஆத்தூர், தர்மபுரி, குளித்தலை, பள்ளப்பட்டி ஆகிய நகராட்சிகள் மற்றும் கயத்தாறு, ஆத்தூர், ஊத்தங்கரை, மல்லசமுத்திரம், திருக்கழுக்குன்றம், காட்டுமன்னார்கோவில், பேரையூர், வ.புதூர் ஆகிய பேரூராட்சிகளில் 31 பழைய பேருந்து நிலையங்கள் ரூ.53.59 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும பகுதிகளிலுள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மழைநீர் வடிகால் ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளுதல்: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும பகுதியில் உள்ள ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகள் மற்றும் குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு ஆகிய நகராட்சி பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பினை தவிர்க்க ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் 30 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

> குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: நகர்புர உள்ளாட்சிகளில் நாள்தோறும் 14,000 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உற்பத்தியாகின்றன.இதில் சுமார் 50 சதவீதம் ஈர கழிவுகளாகவும் எஞ்சியவை உலர் கழிவுகளாகவும் இருக்கின்றன. சென்னையில் 600 மெட்ரிக் டன் அளவிலும், மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் தலா 200 மெட்ரிக் டன் அளவிலும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

> அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: பேரூராட்சிகளில் 11,253 வீடற்ற ஏழைகளுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒன்றிற்கு ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.236.31 கோடி மானியமாக வழங்கப்படும்.

> சென்னையில் உயர்மட்ட பாலங்கள் மற்றும் புதிய மேம்பாலம்: சென்னை மாநகராட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலைகளையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூர் மற்றும் ஓம் சக்தி நகர் ஆகிய இடங்களில் 2 உயர்மட்ட பாலங்கள் ரூ.120 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கொருக்குப்பேட்டையில் உள்ள மணலி சாலையில் 2B சந்திக்கடவில் ரூ.105 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்படும். வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

மேலும் ஜீவன் நகரில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கீழ்ப்பாக்கம் தோட்டத்தில் உள்ள ஆஸ்பிரின் சாலையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இரண்டு பாலங்கள் அமைக்கப்படும்.

> சென்னையில் மழைநீர் வடிகால்: சென்னை மாநகரில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் பொருட்டு கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ரூ.3,220 கோடி மதிப்பீட்டிலும், கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.1,714 கோடி மதிப்பீட்டிலும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஏனைய பகுதிகளில் ரூ.400.63 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக ரூ.291 கோடி மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைத்தல் மற்றும் தற்போதுள்ள மழைநீர் வடிகால்களை மேம்படுத்தும் பணிகள் தமிழக அரசின் வெள்ளத்தடுப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.

> சென்னை கடற்கரைகளில் மர நடைபாதை: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மர நடைபாதை அமைக்கப்பட உள்ளவாறு, பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் மர நடைபாதை அமைக்கப்படும்.

> பெருநகர சென்னை மாநகராட்சி - சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிக்கு ஏற்றவாறு மறுசீரமைப்பு: சென்னை மாநகராட்சியில் உள்ள 22 சட்டப்பேரவை தொகுதி அடிப்படையில் நிர்வாக முறையை செம்மைப்படுத்திட தொகுதிக்கு ஏற்றவாறு மண்டலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு கூடுதல் மண்டலங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

> கூட்டு குடிநீர் திட்டங்கள்: அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், சேலம், நீலகிரி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள 39 கூட்டு குடிநீர் திட்டங்களில் 1,512 குடியிருப்புகளில் உள்ள 14.12 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.269.50 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

> ஆய்விற்கு எடுத்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள்: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், செம்பணார்கோவில், குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியங்களைச் சார்ந்த 1,042 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள 9.11 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

திருவள்ளூர் மாவடம் பூண்டி, கடம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியங்களைச் சார்ந்த 89 குடியிருப்புகளில் உள்ள 37,815 மக்கள் பயன்பெறும் வகையில் நேமம் ஏரிமைய புனரமைத்து அதனை நீராதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஒன்றியங்களில் உள்ள 360 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றை நீராதரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்