'எங்கள் பெயருக்கு பின்னால் சாதி இல்லை' - திராவிட மாடல் என்றால் என்ன? - மக்களவையில் செந்தில்குமார் எம்.பி விளக்கம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி.யான டி,என்.வி.செந்தில்குமார், அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள், 1950 திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசினார். அப்போது அவர், 'திராவிட மாடல்' குறித்து விளக்கினார்.

இது குறித்து இன்று மக்களவையில் தருமபுரி தொகுதி எம்.பியான செந்தில்குமார் பேசும்போது, "இந்த திருத்த மசோதா ஜார்கண்ட் மாநிலத்தின் ஒருசில சமூகங்களை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் இதேபோன்ற மசோதா உத்தரப் பிரதேசத்திற்கும், இதற்குமுன் திரிபுராவிற்கும் கொண்டுவரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இவை எல்லாமே தேர்தல் நோக்கு மற்றும் தேர்தலை மனத்தில் வைத்தே செய்யப்படுகிறது. இப்படி நான் கூறுவதற்கு காரணங்கள் உள்ளன.

பாஜகவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் தலைவராக உள்ளார். அவர் தேர்தலில் தோல்வியடைகிறார்; இருப்பினும் அமைச்சராக்கபடுகிறார். இது, அந்தத் தலைவர் சார்ந்த சமூகமே முன்னேற்றியதைப் போன்ற தோற்றத்தை காட்டும் செயல். தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது, அருந்ததியர்களுக்கு 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கினார். இவைதான் அந்த சமூகத்தை கூட்டாக சமூகப் பொருளாதார தளங்களில் முன்னேற்றும் முறை ஆகும். இதுவே சமூக மேம்பாடு என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்தச் செயல், ஒதுக்கீடு பெற்ற சமூகத்தின் ஆதரவு பெறவதற்கானது அல்ல.

தமிழகத்தில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும் மூன்று சதவீத உள் இடஒதுக்கீடு கூட அமலில் உள்ளது. இவை அனைத்தும் சமூக மேம்பாட்டு நோக்கில் கொண்டுவரப்பட்டவை ஆகும். பல தசாப்தங்களாக குருமன் மக்களின் கோரிக்கை நிலுவையில் உள்ளது. ஒத்த சொற்களுடைய மற்றும் ஒலிப்பு மாறுபாட்டின் பண்புகளையும் கொண்டுள்ள சமூகங்களை ஒன்றிணைத்து பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு '25-க்கும்' மேற்பட்ட குருமன்ஸ்களின் ஒத்த பெயர்களை 'எஸ்.டி பட்டியலில்' சேர்க்க பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. இது, உதகமண்டலத்தில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திடம் இனவியல் ஆய்வு மேற்கொள்வதற்கானப் பணி ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவின் அறிக்கையினை அடிப்படையில் மாநில அரசு குருமன்ஸ் இணையான பெயர்களை எஸ்.டி பட்டியலில் சேர்ப்பதற்காக மத்திய அரசுக்கு ஜூலை 19, 2014இல் பரிந்துரையை அனுப்பியுள்ளது.

மேலும், ஜனவரி 23, 2017-இல் வி.மாணிக்கம் மற்றும் பழங்குடியினர் அமைச்சகத்திற்கு இடையிலான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, குருமன்ஸ் விஷயத்தை சுதந்திரமான பகுப்பாய்விற்காக விரைந்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் மற்றும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் "குருமா, குருமன், குரும்பா, குருமன் கவுண்டர், குரும்பன் மற்றும் குரும்பர்" ஆகிய மக்களை குருமன்ஸ் என பழங்குடி பட்டியலில் சேர்க்க விரைவுபடுத்த வேண்டி நான் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவை கேட்டுக் கொள்கிறேன்.

நானும் கூட இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தேன். இதேபோல், தமிழகத்தில் உள்ள மற்றொரு நீண்ட கால கோரிக்கையான லம்பாடி பழங்குடியின மக்களை எஸ்.டி பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள லம்பாடிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பட்டியல் படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளனர்.

தமிழகத்தில் அவர்களின் மொத்த மக்கள் தொகை சுமார் 2 லட்சம், தர்மபுரியில் மட்டும் 50,000 லம்பாடிகள் ஹரூர் (சிட்லிங்கி தண்டா, சிட்லிங்கி பஞ்சாயத்து), பென்னாகரம், தர்மபுரி தாலுக்கா மற்றும் மேட்டூர் தாலுக்கா (லக்கம்பட்டியில்) வசித்து வருகின்றனர். லம்பாடிகளை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் எஸ்.டி பட்டியலில் சேர்க்க மாநில அரசு 2009 ஆம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பியது. 1994 இல், தேசிய பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான ஆணையத்தால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவும் இதைப் பரிந்துரைத்தது.

எனவே, லம்பாடி சமூகத்தினரையும் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த மற்றும் மிகவும் திறமையான அமுதா ஐஏஎஸ் பணிக்காலத்தில் இந்த குருமன்ஸ் மற்றும் பிற பட்டியல் பழங்குடியினர் பலருக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதன்பின் அவர்களின் உடன்பிறப்புகளுக்கு அது கிடைக்கவில்லை. நரிக்குறவர்கள் மற்றும் குருவிகாரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஏற்கெனவே, எங்கள் முதல்வர், எங்கள் கட்சியை சேர்ந்த ராஜா, விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் காங்கிரஸின் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

திராவிடம் மாடல் என்றால் என்ன என்று பலர் கேட்கிறார்கள். எனவே, அவற்றை பற்றி பேச விரும்புகிறேன். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 உறுப்பினர்கள் இங்கு உள்ளோம்.

எங்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் இல்லை. இவற்றை ஏன் வலியுறுத்துகிறோம் என்று சொல்ல விரும்புகிறேன். நான் எதிர்நிலையில் இருக்கும் உங்களை பார்த்து ஒர் சவால் விடுகிறேன். அவை என்னவென்றால், நான் முன்னேறிய சாதியை சேர்ந்தவனா? அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவனா? அல்லது பழங்குடியைச் சேர்ந்தவனா? என்று உங்களால் அடையாளம் காண முடியுமா?

இதற்கு முடியாது என்பதே பதிலாக இருக்கும். நான் மட்டும் அல்ல தமிழகத்தில் இருந்து வரும் எந்த ஒரு நபரிடம் இருந்தும் அவர் என்ன சாதி என்று பெயரை வைத்து கண்டுபிடிக்க முடியாது. பட்டியல் படுத்தப்பட்ட சாதிகளால் சாதி பெயரை அவர்கள் பெயருடன் போட்டுக்கொள்ள முடியாது, அப்படி என்றால் இதர பிரிவினருக்கு இது ஒரு சலுகைதானே? ஏனெனில் ஐயர்கள், ஐயங்கார்கள், மோடிகள், பானர்ஜிகள், நாயுடுக்கள் போன்றோர்கள் தங்கள் சாதி பெயர்களை பின்னால் போட்டுக்கொள்ள முடியும்.

அதனால் என் கூற்று என்னவென்றால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வது என்பது ஒரு சலுகை ஆகும். ஆனால் ஒரு நபர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பட்டியல் சாதியினருக்கு இச்சலுகை இல்லை. இவை பாகுபாட்டிற்கு வழிவகுக்கும். எனவே, நான் வலியுறுத்துவது இதைக் கேட்ட பிறகு இந்தியாவில் யாரேனும் ஒருவராவது தன் சாதிப் பெயரை மாற்றி இயற்பெயர் மட்டும் வைத்தால் திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE