திண்டிவனம்: தமிழகத்திற்கு என 'தோல் மற்றும் காலணிக் கொள்கை' விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. ஏற்கெனவே, பல காலணி தயாரிப்பு நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அத்துறையில், அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திட முடியும் என்று நம்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் செய்யார் SEZ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் முதல்வர் பேசியது: "கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியில், சமூகத் திறனில் நாம் யாருக்கும், எந்த மாநிலத்தவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில், தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை எல்லாம் இன்றைக்கு தீட்டி, அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நோக்கத்தை இலக்காகக் கொண்டிருக்கக்கூடிய நிறுவனங்களுக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கிக் கொண்டு வருகிறது. ஃபெங் டே (Feng Tay) நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) மேம்பாட்டு நிறுவனத்தினுடைய புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிறுவனத்தினுடைய காலணிகள் தயாரிப்புத் திட்டத்திற்காக 2006-ம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 2009-ம் ஆண்டில், செய்யாறு சிப்காட் பகுதியில் அதற்கான பணிகளை நான் அடிக்கல் நாட்டி அன்றைக்கு தொடங்கி வைத்தேன். 300 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்றைய தினம் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்தது மட்டுமில்லாமல், 35 ஆயிரம் பேர்களுக்கு மேல் வேலைவாய்ப்பையும் கொடுத்திருக்கிறது. அதற்காக இந்த நிறுவனத்தை, அரசின் சார்பில், தமிழக மக்களின் சார்பில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
அதிலும் குறிப்பாக, 70 சதவீதத்திற்கு மேல் பெண்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அதற்கும் என்னுடைய தனிப்பட்ட முறையில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 1000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யவும் இந்த நிறுவனம் திட்டமிட்டிருப்பதை அறிந்து நான் வரவேற்கிறேன். மறைந்த முதல்வர் கருணாநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, நான் அடிக்கல் நாட்டிய ஒரு நிறுவனம், 13 ஆண்டுகளில் இத்தகைய மாபெரும் வளர்ச்சி அடைந்திருப்பதைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன்.
சமூக அமைதியும் தொழில் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நான் சொல்வது இதன் அடிப்படையில்தான். அதனால்தான் தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறோம். அத்தகைய தொழில்கள் ஒரே இடத்தில் குவியாமல் தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டங்களில் அதிகம் உருவாக வேண்டுமென்று நினைக்கிறோம். அனைத்துத் துறைகளும் அனைத்து மாவட்டங்களிலும் வளர வேண்டுமென்று நினைக்கிறோம்.
திமுக அரசு பொறுப்பேற்ற இந்தப் 10 மாத காலத்தில் தமிழகத்தை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வரத் தொடங்கியிருக்கிறது. தமிழக அரசு அளித்துக் கொண்டிருக்கக்கூடிய ஊக்கத்தால், பல தொழில் நிறுவனங்கள் நம்முடைய தமிழகத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தான், கார், கண்ணாடி, மின்னணுவியல் மற்றும் காலணி வரை பல தொழில்நிறுவனங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்து, அந்தத் தொழில் நிறுவனங்களையெல்லாம் அவரே நேரடியாக வந்து தொடங்கி வைத்திருக்கிறார். அவர் தொடங்கி வைத்த பல திட்டங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கு தற்போது நான் அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறேன். இதுதான் ஒரு நல்ல ஆட்சியினுடைய அடையாளமாக, எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
தோல் துறையில், ஒரு கோடி முதலீட்டிற்கு 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆகவே, அத்துறையில் முதலீடுகள் அதிகரிக்க, அதிகரிக்க, வேலைவாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே போகும். இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், மாநிலத்தின் உற்பத்திச் சூழலையும் வெகுவாக மேம்படுத்தும். நான் செல்லுகின்ற இடமெல்லாம், அதிக முதலீடுகளை பெற வேண்டும், தயாரிப்புகளை பல்வகைப்படுத்த வேண்டும், அதிக அளவில் விரிவாக்கம் மேற்கொள்ள வேண்டும், மதிப்புக் கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன், அதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். அவ்வாறே, இன்றும் நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். தோல் ஒரு முக்கியமான பொருளாகத் தொடர்ந்திடும் அதே வேளையில், தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும்.
அண்மையில், நைக் Nike போன்ற காலணித் தயாரிப்பாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களாக வழங்கத் தொடங்கியுள்ளனர் என்று நான் அறிகிறேன். அவ்வாறே, தோல் அல்லாத துறைகளிலும் உங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து விரிவுபடுத்திடுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
காலணி உற்பத்தியில், தேசிய மற்றும் உலக அளவில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. தமிழகத்தின் பங்களிப்பு, தேசிய காலணி உற்பத்தியில் 26 விழுக்காடாகவும், ஏற்றுமதியில் 45 விழுக்காடாகவும் இருக்கிறது. காலணி மற்றும் விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் காலணிச் சந்தையைக் கைப்பற்ற, நம் மாநிலம் பெரும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் தலைநகர் டெல்லியில் நான் சென்றிருந்தபோது பிரதமரை நான் சந்தித்தபோது, அதிகரித்து வரும் காலணிகளுக்கான உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதித் தேவைகளை சமாளிக்க, தமிழகத்தில் உள்ள உற்பத்திக் குழுமங்களை (Manufacturing clusters) பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தேன். “உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை” (Production Linked Incentive) அந்தத் திட்டத்தினை அறிமுகப்படுத்தவும் கோரிக்கை வைத்திருந்தேன்.
தமிழகத்திற்கு என “தோல் மற்றும் காலணிக் கொள்கை”, விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. ஏற்கெனவே, பல காலணி தயாரிப்பு நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அத்துறையில், அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திட முடியும் என்று நான் நம்புகிறேன்.
மோட்டார் வாகனத்துறை, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், பட்டாசு ஆலைகள், காலணி மற்றும் தோல் பொருட்கள் துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பெண்கள் பெருமளவில் பணிசெய்து வருகிறார்கள். சமூகநீதி மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் வகையில், “மகளிர் கொள்கை” ஒன்றை விரைவில் அரசின் சார்பில் நாங்கள் வெளியிட இருக்கிறோம்.
நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 10 மாதங்களிலேயே, பெருமையோடு சொல்கிறேன், இதுவரை 68 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 2 லட்சத்து 5 ஆயிரத்து 402 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை தன்னுடைய அறிக்கையில் அகில இந்திய அளவில், அன்னிய முதலீடு கடந்த ஆண்டை விட 16 விழுக்காடு குறைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கக்கூடிய அதே வேளையில், சென்ற ஆண்டு தமிழகத்தில் ஈர்க்கப்பட்ட அன்னிய முதலீடுகளை விட, இந்த ஆண்டு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் 41.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. இந்த வளர்ச்சி என்பது ஒரு மிகப் பெரிய சாதனை. இது இந்த நல்லாட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு நல்ல பெயர்.
அகில இந்திய அளவில், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில், தமிழகம் முன்னணி மாநிலமாக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட, இந்திய அளவில் மாநிலங்களுக்கான பொருளாதார சுதந்திரத் தரவரிசையில், தமிழ்நாடு, பொருளாதார ரீதியாக இந்தியாவின் மிகவும் சுதந்திரமான மாநிலமாக தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது.
2030-ஆம் ஆண்டில் நம்முடைய மாநிலம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி பெறவேண்டும் என்கிற நமது அரசின் லட்சிய இலக்கைப் பற்றி நான் தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறேன். இந்த இலக்கினை அடைவதற்காக நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.இந்தப் பயணத்தில் எங்களுடன் பங்கேற்றிட வருமாறு முதலீட்டாளர்களுக்கு நான் எல்லாத் தருணங்களிலும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறேன்.
தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறது. முதலீடுகளை ஊக்குவிக்கக்கூடிய நல்லாட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இன்று உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். உங்கள் எதிர்காலத் தொழிற்சாலைகளையும் தமிழகத்திற்கே கொண்டு வாருங்கள். உங்கள் புதிய முதலீடுகளையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செய்யுங்கள். தமிழக இளைஞர்களின் திறனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் திறந்த மனதுடன் செய்து தந்திட இந்த அரசு என்று கூட சொல்லமாட்டேன், நம் அரசு தயாராக இருக்கிறது என்ற அந்த உறுதியைச் சொல்லி, செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் இப்புதிய திட்டம் நன்கு செழித்து, வெற்றி பெற வேண்டும், மற்ற மாவட்டங்களுக்கும் இது பரவ வேண்டும்" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago