சென்னை: தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி த.முருகேசன் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 'தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத் தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, அவர்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்று நடைமுறைப்படுத்தி வருவதோடு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்று வருகிறது. அதேபோன்று, மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை சட்டபூர்வமாக நிலைநாட்டி சமூக நீதிப் போராட்டத்திற்கு மற்றொரு மணிமகுடத்தைக் தமிழக அரசு சூட்டியுள்ளது.
மேலும், சமூக, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிச் சாதிப்பதற்கான மிகவும் முக்கியமான சாதனம் கல்வி என்பதை உணர்ந்து, அதன் வளர்ச்சிக்காக, குறிப்பாக மாணவ மாணவியர்களுக்கு சலுகைகள் வழங்குவதிலும், உதவிகள் புரிவதிலும் தமிழகத்தின் இளையசக்திகள் அனைத்தும் உயர்கல்வியை அடைந்தாக வேண்டும் என்பதைத் தன் உயரிய இலக்காகக் கொண்டு மறைந்த முதல்வர் கருணாநிதி காட்டிய வழியில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல், ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வசதியற்ற கிராமப்புற கடைக்கோடி மாணவர்களின் எட்டாக்கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்புக்காக, நீட் தேர்வு முறையை விலக்கக் கோரும் சமூகநீதிப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த 8-2-2022 அன்று கூட்டப்பட்ட தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு சட்டமுன்வடிவு மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் பின்தங்கிய மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை மீட்டு, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாகும்.
» மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: பக்தர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி
“அறிவை விரிவு செய்; அறிவியல் புதுமை செய்!’’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அந்த வகையில், வருங்காலத் தலைமுறைகளின் அறிவை விரிவு செய்து வளர்த்திடவும்; அறிவியல் புதுமைகளைப் பூத்திடச் செய்திடவும்; இளந்தளிர்களின் உள்ளங்களில் புதிய புதிய சிந்தனைகளை விதைத்து வளர்த்திட வேண்டியதும் நமது இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து, இதுவரை, நாட்டில் பல்வேறு கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன. எனினும், இன்றைய அறிவியல் யுகம் நொடிதோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட எண்ணமுடியாத சில புதுமைகள், இன்றைக்கு மலர்ந்து அறிவு மணம் பரப்புகின்றன. இன்றைய அறிவியல் நாளை பழைமை அடைவது திண்ணம். எனவே, மாணவர்கள் வருங்காலத்தின் அறிவியல் விடியலைக் காண்பதற்கேற்ப, கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணங்களில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
அந்தவகையில், கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய குழுவினை அமைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இக்குழுவின் தலைவராக மாண்பமை டெல்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி த.முருகேசனும், உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் ராம சீனுவாசன், யூனிசெப் நிறுனத்தின் மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர் முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உலக சதுரங்க சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் முனைவர் ச.மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் கிச்சான்குப்பம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெய தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago