திமுக ஆட்சியில் தமிழகத்தில் அமைதியின்மை, வளமின்மை, வளர்ச்சியின்மையே நிலவுகிறது: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அமைதியின்மை, வளமின்மை, வளர்ச்சியின்மை என்ற சூழல் கடந்த பதினோறு மாதங்களாக நிலவி வருகிறது என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ, நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ, அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்." என்று நல்ல ஆட்சிக்கு விளக்கம் தந்திருக்கிறார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் கூற்றிற்கு மாறான நிலைமை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற சூழ்நிலை மாறி, 'அமைதியின்மை, வளமின்மை, வளர்ச்சியின்மை' என்ற சூழல் கடந்த பதினோறு மாதங்களாக நிலவி வருகிறது. காவல் துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சிய காலம் மாறி, ரவுடிகளை கண்டு காவல் துறை அஞ்சும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

திமுக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றதிலிருந்து பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும், கொள்ளைகளும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அரசு அதிகாரிகளும், சிறு தொழிலதிபர்களும், வியாபாரிகளும், இன்னும் சொல்லப்போனால், காவல் துறையினரே மிரட்டப்படும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அன்றாடம் நடைபெற்று வருகின்றன.

பல நிகழ்வுகளில் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. விருதுநகர் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் தொழிலாளியை பாலியல் தொந்தரவு செய்ததில் உள்ளூர் திமுக-வினருக்கு பங்கு இருக்கிறது என்பதை உதாரணமாகச் சொல்லலாம்.
இதேபோன்று, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தாயை இழந்த பள்ளி மாணவிக்கு கல்வி உதவி செய்வதாகக் கூறி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் திமுக பிரமுகர். பின்னர் அந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், அந்த திமுக பிரமுகர்
போக்சோவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவையெல்லாம் ஆளுங் கட்சியினரால் ஏற்படும் அராஜக செயல்களுக்கு எடுத்துக்காட்டுகள்.

இதேபோல், மணல் கடத்தல், சாலை போடுதல் போன்ற பணிகளிலும் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. ரவுடிகளின் அட்டகாசம் தமிழகத்தில் கொடிகட்டி பறக்கிறது. சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஒரு ரவுடி வெட்டி கொலை
செய்யப்பட்டு இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியை கத்தியால் தாக்கப்பட்டு இருக்கிறார். அண்மையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கஞ்சா விற்பனை
கொடிகட்டி பறப்பதையும், இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருவதையும் அறிந்த காவல் துறையினர், அந்த இடத்திற்குச் சென்று அதனை தடுக்க முயன்றபோது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு, அதில் காவலர்கள் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காவல் துறையினரையே தாக்கும் அளவுக்கு ரவுடிகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. இந்தச் சூழ்நிலையில், மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சென்னை நகரின் பிரதானப் பகுதியான பாரிமுனையில் பட்டப் பகலில் திமுக பிரமுகர் சவுந்தரராஜனை மர்மக் கும்பல் பயங்கரமான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இது சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

தற்போதைய திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், குறு, சிறு தொழிலதிபர்கள், வியாபாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இன்னும் சொல்லப் போனால் பாதுகாப்பினை வழங்கக் கூடிய காவல் துறையினர் என அனைத்துத் தரப்பினரும் ஓர் அச்ச உணர்வுடனேயே இருக்கின்றனர். மொத்தத்தில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதற்குக் காரணம் சமூக விரோதிகளின் பயமின்மை.

பொது அமைதி இல்லை என்றால் தொழில் வளம் இருக்காது, தொழில் வளம் இல்லை என்றால் பொருளாதார வளர்ச்சி இருக்காது, பொருளாதார வளர்ச்சி இல்லையென்றால் வேலைவாய்ப்புகள் இருக்காது. வேலைவாய்ப்புகள் இல்லையென்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். இது ஒரு கெடுசூழல். எனவே பொது அமைதியை உருவாக்க வேண்டிய கடமை, சட்டம்-ஒழுங்கை சீராக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு, முதல்வருக்கு நிச்சயம் உண்டு.

சுகாதாரம், செல்வ வளம், விளைபொருளின் வளம், இன்ப வாழ்வு, நல்ல பாதுகாப்பு ஆகிய ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, அமைதியை நிலை நாட்டி, அதன்மூலம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில்
முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்