சென்னை: ஜவ்வாது மலை விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும், உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் முதல்வருக்கு மலைவாழ் மக்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பி.டில்லிபாபு, தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: 'கடந்த 02.04.2022 தேதியன்று திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை, நெல்லிவாசல்நாடு, புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், சேம்பறை கிராமத்தில் உள்ள சஞ்சீவன் (ஆஞ்சநேயர்) மலைக்கோயிலுக்கு செல்லும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அதே இடத்தில் 3 பள்ளிச் சிறுவர்கள் உட்பட 5 பேரும், சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் 6 பேரும் உட்பட 11 மலைவாழ் மக்கள் அகால மரணமடைந்த செய்தி தமிழகத்தின் பழங்குடியினர் மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த சிலமணி நேரத்தில் ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணி மற்றும் மருத்துவ சிகிச்சை பணியில் ஈடுபட்டது நல்ல அம்சமாகும்.
புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சஞ்சீவன் மலைக்கோயிலுக்கு செல்லும் போது அவ்வழியே சென்ற டெம்போவில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் என 34 பேர்களை நின்றுகொண்டே பயணித்தபோது வளைவில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, வண்டி பின்னோக்கியே இழுத்து அதளபாளாத்தில் உருண்டு மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்படுத்திய பெரும் துயர சம்பவத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்கள் மிகவும் வறிய நிலையில் உள்ள பழங்குடி மக்களாவர். தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதுடன், இவர்களது குடும்பச் சூழலை கணக்கில் கொண்டு உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் மாநில அரசு வழங்கிட வேண்டுகிறோம். அதேபோல் புலியூர் பரசுராமன் குடும்பத்தில் மனைவி சாந்தா (40), மகள்கள் பவித்ரா (18), சர்மிளா (12) என மூன்று பேர் ஒரே குடும்பத்தில் பலியான அக்குடும்பத்திற்கு இவர்களது மூத்த மகளான மருத்துவமனையில் சிகிக்சைப் பெற்று வரும் கவுசல்யாவிற்கு அரசு பணி வழங்கிட வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம்: இத்தகைய விபத்துக்கு காரணமான ஓட்டுநரின் முழு கவனமின்மை என்றாலும், கடந்த 3 வருடகாலமாக வனத்துறையினர் ஜல்லி கொட்டிய பின்பும், சாலைபோட அனுமதி மறுத்ததால், சரியான சாலை வசதி இல்லாத மாவட்ட நிர்வாகம்தான் இவ்வுயிரிழப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும். நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் பழங்குடி மக்கள் மலைகளில் 8 கி.மீ, 10 கி.மீ தூரம் பள்ளி மாணவர்கள் உட்பட காட்டு வழிப்பாதையில் நடந்தே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதே ஜவ்வாது மலை, விளாங்குப்பம் கிராமத்தில் உடல் நலம் சரியில்லாதவர்களை கடந்த 15 தினங்களுக்கு முன்பாக தூளி கட்டி தூக்கி சென்ற அவலத்தை மாவட்ட நிர்வாகம் அறிந்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
மக்களின் உரிமைகளை மறுக்கும் வனத்துறை: பழங்குடி மக்களின் அடிப்படையான உரிமையைப் பெறுவதற்கு இந்த ஜவ்வாது மலைவாழ் மக்களின் 11 உயிர்கள் பலி கொடுத்த பின்னரும் அரசை எதிர்நோக்கவேண்டிய நிலை தொடர்கிறது. வனத்துறையின் சட்டவிரோதமான போக்கினால் மலைவாழ் மக்கள் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, மலைவாழ் மக்களின் அடிப்படையான கோரிக்கைகள் கூட மாவட்ட நிர்வாகம் இதுவரை கண்டுகொள்ளவில்லை. ஜவ்வாது மலைப்பகுதியில் சாலை வசதியில்லாத மலை கிராமங்களுக்கு சாலைவசதியை ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்து வசதி இல்லாத அப்பகுதிகளுக்கு போக்குவரத்து வசதியும் தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடுமாறு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago