சென்னை: பொருளாதாரப் பேரழிவில் சிக்கியுள்ள இலங்கையை மீட்பதற்கு இந்திய அரசு நிதியுதவி செய்கிற அதேவேளையில், இலங்கையில் வாழ்கிற பூர்வீகத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தால் உணவு தானியங்கள், எரிபொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஏற்றுமதி கடுமையாகக் குறைந்து, இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய அவலநிலை அங்கு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காமல் மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பாக மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்று இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்காகக் கடந்த 1 ஆம் தேதி முதல் பொது அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். 36 மணிநேர ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவுக்கு இன்றைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கை தான் காரணமாக அமைந்திருக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரை தேயிலை, காபி, ரப்பர் உற்பத்தி மலையகப் பகுதிகளில் பெருமளவில் நடந்து வந்தது. ஏற்றுமதியில் கணிசமான பங்கு இவற்றுக்கு இருந்தது. விவசாயத்துறையில் சீர்திருத்தம் செய்வதாகக் கூறி இரசாயன உரங்கள் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்து இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஒரே நேரத்தில் 100 சதவீத இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் நெல் உள்ளிட்ட உணவு தானியங்களின் உற்பத்தி கடுமையாகப் பாதித்தது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது.
» ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைகிறது ஹெச்டிஎப்சி வீட்டுக்கடன் நிறுவனம்: பங்குகள் உயர்வு
» சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
இலங்கையில் பிரச்சினை ஏற்படுகிற போதெல்லாம் அதனைத் தீர்ப்பதற்கு இந்தியா எப்பொழுதும் உதவி செய்து வருகிறது. அந்த அடிப்படையில் இலங்கை சுதந்திரம் பெற்றவுடனே மலையகப் பகுதியில் வாழ்கிற வம்சாவளி தமிழர்களின் குடியுரிமை பிரச்சினை எழுந்தது. அதைத் தீர்ப்பதற்காக ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இலங்கையின் பூர்வீகக் குடிகளாக இருக்கிற தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் போடப்பட்ட ஒப்பந்தங்கள் முழுமையான பலன்களைத் தராத நிலையில் மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி, அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதனடிப்படையில் இலங்கை நாடாளுமன்றத்தில் 13-வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இன்றைக்கும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு கவசமாக இருப்பது 13-வது திருத்தம் தான். அந்த ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு தமிழ் தாயகப் பகுதி உருவாக்கப்பட்டது. அங்கு இடைக்கால அரசு அமைந்து வரதராஜ பெருமாள் முதல்வராகத் தேர்வு பெற்றார். ஆனால், பிறகு நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு ரத்து செய்யப்பட்டது. எனவே, மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி போட்ட ஒப்பந்தத்தினால் உருவான 13-வது திருத்தத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணம் மீண்டும் இணைக்கப்பட வேண்டும்.
கடந்த மார்ச் 18 அன்று இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 7,600 கோடி ரூபாய் கடனுதவி செய்திருக்கிறார். அன்னியச் செலாவணி பிரச்சினையிலிருந்து மீளுவதற்கு இந்த நிதியுதவி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் 10 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை இலங்கை நாட்டிற்கு இந்தியா 2.4 பில்லியன் டாலர் நிதியுதவி செய்திருக்கிறது. இந்த நிதியுதவிகள் இலங்கை அரசுக்குச் செய்யப்பட்டாலும் அதில் கணிசமான பகுதி இலங்கையில் வாழ்கிற ஒட்டுமொத்த தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கிற வகையில் அமைந்திட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றைக்கும் இலங்கையில் வாழ்கிற தமிழர்கள் சிங்கள மக்களுக்கு இணையாக சம உரிமையோ, சம வாய்ப்போ இல்லாமல் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். வடக்கு மாகாணத்தில் நடைபெறுகிற ஆட்சிக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இதன்மூலமாக, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண ஆட்சியால் எதையும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இலங்கையில் வாழ்கிற ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 13-வது திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்த இலங்கை அரசின் மீது இந்திய அரசு உரிய அழுத்தத்தை வழங்க வேண்டும்.
எனவே, பொருளாதாரப் பேரழிவில் சிக்கியுள்ள இலங்கையை மீட்பதற்கு இந்திய அரசு நிதியுதவி செய்கிற அதேவேளையில், இலங்கையில் வாழ்கிற பூர்வீகத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மகாத்மா காந்தி ஆலோசனையின் பேரில், பண்டித ஜவஹர்லால் நேரு எடுத்த முயற்சியின் காரணமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 1939 இல் தொடங்கப்பட்டது. அதன் தலைவராக தொடக்கத்தில் சவுமியமூர்த்தி தொண்டமான், பிறகு ஆறுமுகன் தொண்டமான் செயல்பட்டு வந்தார்கள். ஆறுமுகன் தொண்டமான் மறைவிற்கு பிறகு சமீபத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தேர்வு பெற்றிருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago