சென்னை: மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் கூடாது; பழுதடைந்த பள்ளிகளை இடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் 6033 அரசுப் பள்ளிகளில் உள்ள 8228 பழுதடைந்த கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்பட வில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
திருநெல்வேலியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் கழிப்பறை இடிந்து விழுந்த விபத்தில் மாணவர்கள் மூவர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அத்தகைய விபத்துகள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் இனி நிகழக் கூடாது என்ற எண்ணத்தில், தமிழகம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை இடித்து விட்டு, புதியக் கட்டிடங்களைக் கட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார்.
அதன் பின்னர் 100 நாட்களுக்கும் மேலாகி விட்ட நிலையில், 3,482 பள்ளிகளில் 4,808 பழுதடைந்த கட்டிடங்கள் மட்டும் இடிக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி விபத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் 9,573 பள்ளிகளில் உள்ள 13,036 கட்டிடங்கள் பழுதடைந்திருப்பதாக கண்டறியப்பட்டது. அனைத்துப் பள்ளிகளையும் இடிக்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் ஆணையாகும். இடிக்கப் பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயில மாற்று இடங்களையும் அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
ஆனாலும், கூட ஒட்டுமொத்தமாக இடிக்கப்பட வேண்டிய பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு பள்ளிகள் தான் இடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 6,033 பள்ளிகளில் உள்ள 8,228 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும். பல மாவட்டங்களில் பத்துக்கும் குறைவான விழுக்காடு பள்ளிகள் மட்டும் தான் இடிக்கப்பட்டுள்ளன; அங்குள்ள 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடிக்க வேண்டியுள்ளது.
எடுத்துக்காட்டாக, திருவாரூர் மாவட்டத்தில் பழுதடைந்து இடிக்க வேண்டிய நிலையில் உள்ள 334 பள்ளிக் கட்டிடங்களில் 25 மட்டுமே இடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 309 கட்டிடங்கள், அதாவது 92% கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 423 கட்டிடங்களில் 44 மட்டுமே இடிக்கப்பட்ட நிலையில், இன்னும் 379, அதாவது 90% கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87%, இராமநாதபுரம் மாவட்டத்தில் 86%, புதுக்கோட்டை மாவட்டத்தில் 85% கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும். பழுதடைந்த கட்டிடங்களை இடிப்பதில் இவ்வளவு அலட்சியம் காட்டக்கூடாது.
சென்னையில் நாளை நடைபெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களே குழப்பமாக உள்ளன. ஒரு பள்ளியில் ஒரு கட்டிடமோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களோ இடிக்கப்பட வேண்டியிருக்கும் என்பதால், பள்ளிகளின் எண்ணிக்கையை விட கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் 91 பள்ளிகளில் 66 கட்டிடங்கள் இடிக்கப் பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம் எனத் தெரியவில்லை, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகள் மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இன்னும் குழப்பமாக உள்ளன. அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முன்வைக்கப்படும் புள்ளிவிவரங்களில் இவ்வளவு குழப்பங்கள் இருப்பது அனைத்து நிலை அதிகாரிகள் நிலையில் காணப்படும் அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. அதற்கு இன்னும் 70 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மீதமுள்ள பள்ளிக் கட்டிடங்களையும் இடித்து, அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு மாற்று வகுப்பறைகள் செய்து தருவது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.
ஒருவேளை இடிக்கப்பட்ட கட்டிடங்கள் தவிர மீதமுள்ள கட்டிடங்களை இடிக்காமல், தற்காலிகமாக பயன்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று அரசு முடிவு செய்தால் அது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். பள்ளிக் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன என்பதை தெரிந்து கொண்டே அவற்றில் வகுப்புகளை நடத்துவது மாணவர்களின் உயிருடன் விளையாடும் செயல். அப்படி ஒரு திட்டம் இருந்தால் அதை கைவிட வேண்டும்.
இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்களை கட்டுவது இன்னும் சவாலான செயல். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி நடப்பாண்டில் ரூ.1,300 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதைக் கொண்டு 13,036 புதிய பள்ளிக்கட்டிடங்கள் எவ்வாறு கட்டி முடிக்க முடியும் என்று தெரியவில்லை. ஒருவேளை அத்திட்டத்திற்காக 5 ஆண்டுகளில் மொத்தமாக ஒதுக்கப்படும் ரூ.7,000 கோடியில் தான் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என்றால் அதுவும் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழுதடைந்த எந்த கட்டிடத்திலும் வகுப்புகள் நடத்தப்படக்கூடாது. அவற்றை இடித்து விட்டு, நடப்பு நிதியாண்டிற்குள் புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்பட வேண்டும். அதற்குத் தேவையான கூடுதல் நிதியை அரசிடம் பள்ளிக்கல்வித் துறை கோர வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago