நாகஸ்வர சக்கரவர்த்தி காருக்குறிச்சி அருணாச்சலம் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுமா?

தமிழகத்துக்கும், தமிழ் இசைக்கும் பெருமை சேர்த்த நாகஸ்வர சக்கரவர்த்தி காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழாவை, அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காருக்குறிச்சி என்ற குக்கிராமத்தின் பெயர் நாடு முழுக்கஒலிக்கக் காரணமாக இருந்தவர் நாகஸ்வர கலைஞர் அருணாச்சலம். அவரின் நாகஸ்வர இசைக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையே சொக்கிக்கிடந்துள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், காருக்குறிச்சி அருணாச்சலம் வந்த காரின் கதவைத் திறந்துவிட்டு, வரவேற்ற நிகழ்வும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அருணாச்சலம், முன்னாள் முதல்வர் அண்ணாவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். அவர் மறைந்தபோது, அண்ணா எழுதிய இரங்கல் செய்தி மிகவும் உருக்கமானதாக இருந்தது. இதேபோல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் காருக்குறிச்சியாருக்கும் இடையேயும் நெருங்கிய நட்பு இருந்தது. சென்னைக்கு செல்லும் போதெல்லாம் என்.எஸ்.கே. வீட்டில்தான்காருக்குறிச்சியார் தங்கி இருக்கிறார். காருக்குறிச்சியாரின் குடும்பத்தில் ஒருவராகவே நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இருந்திருக்கிறார்.

கோவில்பட்டியில் காருக்குறிச்சியாருக்கு நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரி தம்பதியர் சிலை அமைத்து சிறப்பு சேர்த்தனர். ‘காருக்குறிச்சியார் எங்கள் ஊர் மாப்பிள்ளை’ என்று கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெருமைப்பட கூறியிருக்கிறார். இதுபோல், காமராஜர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடனும், திரைப்பட கலைஞர்களுடனும் தனது திறமையால் தொடர்பை வளர்த்துக்கொண்டார்.

சிறப்புகள் பலவற்றுக்கு சொந்தக்காரரான காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழா கடந்த 24.6.2021-ல் தொடங்கியது. பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் பல இடங்களிலும் அவரது நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் இந்தவிழாவை சிறப்பாக கொண்டாடவும், அவரது வாரிசுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்சங்கச் செயலாளர் கிருஷி கூறியதாவது: அரசு சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடுவதுடன், காருக்குறிச்சியாரின் வாழ்நாள் கனவான, தமிழிசைக்கும் - நாகஸ்வர இசைக்குமான இசைப் பள்ளி ஒன்றை திருநெல்வேலியில் தொடங்க வேண்டும்.

1960-ல் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், நாகஸ்வர இசைப் பள்ளி தொடங்க காருக்குறிச்சியார் பெயருக்கு 10 ஏக்கர் நிலத்தை கோவில்பட்டியில் ஒதுக்கி தந்ததாகவும், ஆனால், தற்போது காருக்குறிச்சியார் நினைவிடத்தைத் தவிர மற்ற அனைத்துநிலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவரது குடும்பம் கையறுநிலையில் உள்ளது. தமிழிசைக்காக, காருக்குறிச்சியார் நினைவிடத்தை உள்ளடக்கி, தமிழ்நாடு அரசு காருக்குறிச்சி அருணாச்சலம் தமிழிசைப் பள்ளியை உருவாக்க வேண்டும். அவரது வாரிசுதாரர்களுக்கு உதவிகள் செய்து கைதூக்கிவிட வேண்டும். இவ்வாறு கிருஷி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE