பயணிகளுக்கு கைகொடுத்த கோவை விரைவு ரயில்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றதால் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

அரக்கோணம் செல்வதற்கான மின்சார ரயில் காலதாமதமாக இயக்கப்பட்டதால், கோவை செல்வதற்காக தவித்த பயணிகளுக்கு உதவும் வகையில், சிறப்பு அனுமதி பெற்று கோவை விரைவு ரயில் திருவள்ளூரில் நின்றுபயணிகளை ஏற்றிச் சென்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் பலர் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் செல்ல கோவை விரைவு ரயிலில் பயணம்செய்கின்றனர். இந்த விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிற்காது. சென்னையில் இருந்துபுறப்பட்டால் அடுத்ததாக அரக்கோணம் ரயில் நிலையத்தில்தான் நிற்கும்.

இதனால், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோவை விரைவு ரயிலைப் பிடிக்க காலை 6.15 மணிக்கு வரும் மின்சார ரயிலில் ஏறி 6.55 மணிக்கு அரக்கோணம் செல்வர். பின்னர்,15 நிமிட இடைவெளியில் அங்கு வரும் கோவை விரைவு ரயிலில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்குச் செல்வர்.

இந்நிலையில், நேற்று காலை திருவள்ளூருக்கு காலை 6.15 மணிக்கு வர வேண்டிய சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரயில் காலதாமதமாக வந்தது. இதனால், பதட்டம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தனர்.

பயணிகள் அனைவரும் திருவள்ளூர் ரயில் நிலைய அதிகாரியிடம் சென்று கோவை விரைவு ரயிலை திருவள்ளூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். அவரும் உடனடியாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நிலைமையை விவரித்து கோவை விரைவு ரயில் திருவள்ளூரில் நின்று செல்ல அனுமதிக்குமாறு கோரினார்.

அவரது கோரிக்கை ஏற்று கோவை விரைவு ரயில் நேற்றுசிறப்பு அனுமதியாக திருவள்ளூரில் நின்று சென்றது. இதையடுத்து, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தவித்த பயணிகள் கோவை விரைவு ரயிலில் ஏறி தங்களது பயணத்தை நிம்மதியாகத் தொடந்தனர். கோவை விரைவு ரயிலுக்கு திருவள்ளூரில் நிறுத்தம் வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பயணிகள் கூறும்போது, “கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தபோது சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், நான்கைந்து நாட்களுக்கு கோவை விரைவு ரயில்உள்ளிட்ட பல ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. அப்போது, கோவை விரைவு ரயிலுக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 300 டிக்கெட்களுக்கு மேல் விற்பனையாகின. எனவே, இந்த ரயில் நிரந்தரமாக திருவள்ளூர் ரயில்நிலையத்தில் நின்று சென்றால் அதிக பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, கோவை விரைவு ரயில் திருவள்ளூரில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE