'சொத்து வரி உயர்வு மனசாட்சி இல்லாத செயல்' - டிடிவி தினகரன் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் சொத்து வரியை நூறு சதவீதம் வரை உயர்த்தியிருக்கிற திமுக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும், சொத்து வரி உயர்வு மனசாட்சி இல்லாத செயல் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக 600 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு, 25 சதவீதம்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600-க்கு மேல்‌ 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம்‌ சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 1200-க்கு மேல் முதல்‌ 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம்‌ சொத்து வரி உயர்கிறது. 1800க்கு மேல் அதிகமான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம்‌ சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது உள்ள சொத்து வரியில்‌, வணிக பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களுக்கு 100 சதவீதமும்‌, தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களுக்கு 75 சதவீதமும்‌ உயர்த்தப்படுகிறது. அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்‌ இதர 20 மாநகராட்சிகளில்‌, சொத்து மதிப்பு உயர்வு 2022-23-ம்‌ நிதியாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது: "தமிழகம் முழுவதும் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிற திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதான் நீங்கள் தமிழக மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா?

கரோனா பாதிப்புக்குப் பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்படத்தொடங்கி இருக்கும் நிலையில், இப்படி ஒவ்வொன்றாக மக்கள் தலையில் இடி விழுவது போல் அறிவிப்புகளை வெளியிடுவது மனசாட்சி இல்லாத செயல். எனவே, சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE