புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) தலைவர் டிவோர்கோச் ஆர்கடி சந்தித்தார். இருவரும், சென்னையில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டி குறித்து கலந்துரையாடினர்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான பெருமை வாய்ந்த இடமாக சென்னை தேர்வு செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், உலகமே கொண்டாடும் வகையிலான இந்நிகழ்வினை சிறப்பானதாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும், அதற்கான பணிகளை விரைந்து முடித்திடவும் ஏதுவாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் டிவோர்கோச் ஆர்கடி ஆகியோரின் சந்திப்பு அமைந்துள்ளது.
சதுரங்க ஒலிம்பியாட் 1927-ல் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினால் (FIDE) தொடங்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்போது முதன்முறையாக இந்தியாவில், அதுவும் இந்தியாவின் சதுரங்க தலைநகரான சென்னையில் நடைபெறவிருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். உலகெங்கிலும் 186 நாடுகளிலிருந்து பல பிரபலமான கிராண்ட் மாஸ்டர்ஸ் உட்பட சுமார் 2,000 சதுரங்க வீரர்கள் சென்னையில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சதுரங்க ஒலிம்பியாட் குழு (CCOC) ஒன்றினை இதற்கென உருவாக்குவதற்கு உரிய அரசாணையை வெளியிடுவதற்கான பணிகளும், இப்போட்டியை வண்ணமயமான தொடக்க விழா மற்றும் கண்கவர் நிறைவு விழாக்களுடன் நடத்துவதற்குத் தேவையான பல்வேறு தொடக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய கலாச்சார, நாட்டுப்புறக் கலை வல்லுநர்கள் இவ்விழாக்களில் தங்களது பங்களிப்பினை வழங்கி, இந்நிகழ்ச்சியினை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்றவிருக்கிறார்கள்.
44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி, 27-7-2022 முதல் 10-8-2022 வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுவதன் வாயிலாக, நமது மாநிலத்தின் பண்பாடு, பாரம்பரியம், விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் பல சிறப்பம்சங்கள் உலக அளவில் பேசுபொருளாக விளங்கும்.
சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) தலைவராக 2018 முதல், கடந்த 4 ஆண்டுகளாக பொறுப்பு வகித்துவரும் டிவோர்கோச் ஆர்கடி, இந்தியாவில், குறிப்பாக சென்னையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து, தனது மகிழ்ச்சியை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தார். பதிலுக்கு, இப்போட்டி சிறப்புடன் நடைபெற தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தக் கலந்துரையாடலின்போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago