மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) தமிழ்நாடு மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்படடார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது தமிழ்நாடு மாநில மாநாடு மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்.1-ம் தேதி வரை மதுரையில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 15 பேர் கொண்ட செயற்குழுவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. ஏப்ரல் 6 முதல் 10 ஆம் தேதி வரை கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் 23-வது அகில இந்திய மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து 50 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5 பேர் கொண்ட மாநில கட்டுப்பாட்டுக்குழுவிற்கு தோழர். ப. சுந்தரராசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், அ.சவுந்தரராசன், ஏ.கே.பத்மநாபன், சுதா சுந்தரராமன் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 553 பேர் கலந்து கொண்டனர்.
கே. பாலகிருஷ்ணன்: கே.பாலகிருஷ்ணன் (வயது 70) அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1970-ம் ஆண்டில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்றவர். 1973-ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட செயலாற்றியவர்.
1975-ம் ஆண்டு அவசர நிலை காலத்தின் போது தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு கட்சி பணிகளை நிறைவேற்றினார். 1989-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தின் கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1982-ம் ஆண்டு முதல் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்ட கே.பாலகிருஷ்ணன் 1998-ம் ஆண்டு மாநில செயற்குழு உறுப்பினராகவும், 2012-ம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், 2018-ல் மாநிலச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினராக 2011-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு தொகுதியிலும், சட்டப்பேரவையிலும் சிறப்பாக பணியாற்றியவர்.கே. பாலகிருஷ்ணனின் மனைவி பா. ஜான்சிராணி கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சார்ந்தவர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பாஜகவை எதிர்த்து நடைபெறும் கூட்டுப்போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். இன்றைக்கு ஆட்சியில் இருக்கிற திமுக அறிவித்திருக்கின்ற பல அறிவிப்புகளை வரவேற்கின்ற அதே நேரத்தில், மேலும் பல திட்டங்களை, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துவோம்.
ஒரு நட்பு கட்சி என்கிற முறையில், திமுகவை வலியுறுத்துகிற, இதை நிறைவேற்றும் என்று கேட்கிற வகையில் நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம். அதேசமயத்தில் மக்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள் என்று வருகிறபோது, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது, விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிறது. பல இடங்களில் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தின் அடிப்படையில்தான் ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். சிறு குறு தொழில்கள் முற்றிலும் நாசமாகிப் போய்க்கிடக்கிறது.
வரக்கூடிய நாட்களில் இதுபோல பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மையப்படுத்தி,நாங்கள் தனியாகவும் போராடுவோம், எங்களுடன் ஒத்த கருத்துடன் பயணிக்கும் அமைப்புகளை இணைத்துக் கொண்டும் போராடுவோம். படிப்படியாக தமிழ்நாட்டில் ஒரு இடதுசாரி ஜனநாயக மாற்றை உருவாக்குகிற பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது என்பதை தீர்மானித்துள்ளோம்.
தமிழக அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு தனிசட்டத்தை இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றளவும் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை என்பது நடைபெறுகிறது. தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஓர் அமைச்சர், ஒரு பிடிஓ அதிகாரியைப் பார்த்து , நீ எஸ்சி பிடிஓ என்று இழிவுபடுத்துகிற வகையில் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு முதல்வர் அந்த அமைச்சரின் துறையை மாற்றிய நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் இது துறையை மாற்றுவதால் மட்டும் தீரும் பிரச்சினை இல்லை. இதை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வரும் குற்றமாக முதல்வர் கருத வேண்டும்" என்று அவர் கூறினார். .
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago