14 கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்: டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆகியோர் உடனான சந்திப்புகள் மனநிறைவை அளிப்பதாக அமைந்திருந்தன என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் எனது மூன்றாவது டெல்லி பயணம் இது. இந்தியப் பிரதமரை இன்று பகல் நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். இந்த சந்திப்பிற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தபோது, உடனடியாக அதற்கு நேரம் ஒதுக்கி, என்னை சந்தித்ததற்காக பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் மிக முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் நான் வழங்கினேன். அந்தக் கோரிக்கைகளில் இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை அவரிடம் நான் தெளிவாக எடுத்துரைத்தேன். அப்போது அனைத்தையும் பொறுமையாக பிரதமர், அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடத்தில் உறுதியளித்தார். பிரதமர் அளித்த உறுதிமொழிக்காகவும் இந்த நேரத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமருடன் உடனான இந்தச் சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாகவும், மன நிறைவைத் தருவதாகவும் அமைந்திருந்தது. பிரதமரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் பத்திரிகையாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில முக்கிய கோரிக்கைகளை மட்டும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இலங்கையில் தற்போது நடந்துவரும் அசாதாரண சூழ்நிலைய நீங்கள் அறிவீர்கள். பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் தவித்துக்கொண்டிருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், உதவி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

அதேபோல் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் அவர்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வைத்திருக்கிறேன். அதேநேரத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், அரசியல் உரிமையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளேன். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை குறித்தும் வலியுறுத்தியிருக்கிறேன். கச்சத்தீவு மீட்பு குறித்தும் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

தொடர்ந்து உக்ரைனில் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களின் மருத்துவக் கல்லூரி படிப்பை இந்தியாவில் தொடர அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன். காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளேன். மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயை பகிர்ந்தளிக்க வேண்டும். ஜூன் 2022-க்கும் பின்பும், ஜிஎஸ்டி இழப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.

நரிக்குறவர்கள் / குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் நான் எடுத்து வைத்துள்ளேன். முக்கியமாக, பிரதமரிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் நான் அழுத்தத்துடன் பதிவு செய்தது என்னவென்றால், நீட் பிரச்சினை. நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கும் சட்ட முன்வடிவை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, இரண்டாவது முறை தமிழக ஆளுநருக்கு நாங்கள் அனுப்பி வைத்தோம். ஆனால், இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் இப்போது வரை இன்னும் தாமதம் செய்துகொண்டிருக்கிறார்.

இந்த சட்டமுன்வடிவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடத்தில், தமிழகத்துக்கு வரவேண்டிய வெள்ள நிவாரண நிதிகள் குறித்தும் வலியுறுத்தியிருக்கிறேன். காவல் மற்றும் தீயணைப்புத்துறையை நவீனப்படுத்தவும் நிதி ஒதுக்கீடு கோரியிருக்கிறேன்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, தமிழகத்தில் அமையவிருக்கக்கூடிய புதிய விமான நிலையங்கள் அமைத்திட தேவைப்படக்கூடிய பாதுகாப்புத்துறை வசம் இருக்கக்கூடிய நிலங்களை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகத்தில் டிஆர்டிஓ ஆய்வுக் கூடம் அமைக்கப்பட வேண்டும். சேலம் இரும்பாலையின் மிகைநிலத்தை பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்க வேண்டும். மத்திய அரசுப் பாதுகாப்பு துறை தொடர்பாக சில திட்டமிடுதல்களை செய்து வருகிறது. மத்திய அரசு அமைக்க திட்டமிட்டுள்ள Aviation Technology Hub ஒன்றினை கோவையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்து வைத்துள்ளேன்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை எடுத்து வைத்துள்ளேன். முக்கியமாக, சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றவும், சென்னை - மதுரவாயல் உயர்மட்ட சாலை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்கவும் கோரிக்கை வைத்திருக்கிறேன். தாம்பரம் செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். மாநிலத்தில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.

என்னுடைய இந்த சந்திப்பைப் பொருத்தவரைக்கும், பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆகியோர் உடனான சந்திப்புகள் மனநிறைவை அளிப்பதாக அமைந்திருந்தன. எங்களின் உரையாடலின் போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தொழிற் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத்துறையில் அதிகளவிலான திட்டங்களை, செயல்படுத்த இருப்பதாக அவரே கூறினார். அதேபோல் அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் பாதுகாப்புத்துறை தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு, தமிழ்நாடுதான் உகந்த மாநிலமாகத் திகழ்வதாக பாராட்டி அதை எங்களிடம் எடுத்துக் கூறினார்.

நான் இன்று வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி, எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளனர். தொடர்ந்து அதை வலியுறுத்துவார்கள் என்பதை இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் தமிழக மக்களுக்கு நான் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

நாளைய தினம் (ஏப்.1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், வர்த்தகம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயலையும், நான் சந்திக்க இருக்கிறேன். அதற்கான நேரத்தை அவர்கள் ஒதுக்கியுள்ளனர். தமிழகத்துக்கான கோரிக்கைகளை அவர்களிடமும் நான் எடுத்து வைப்பேன். அதேபோல் டெல்லி மாடல் ஸ்கூல் ஒன்றினை நாளை நான் பார்வையிட உள்ளேன். அப்போது டெல்லி முதல்வரும் என்னோடு வருவதாக சொல்லியிருக்கிறார். அவருடன் சேர்ந்து அதை நான் பார்வையிட இருக்கிறேன். அதைத்தொடர்ந்து ஏப்.2 மாலை அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

மேகதாட்டு அணை குறித்து ஏற்கெனவே கூறியிருக்கிறீர்கள், தற்போதும் வலியுறுத்தியிருக்கிறீர்கள், அதனைத் தொடர்ந்து கவனித்து எது நியாயமோ அதை செய்வதாக பிரதமர் உறுதியளித்தார். தமிழகம் திரும்பும் இலங்கை தமிழர்கள் தொடர்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இலங்கையில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு அகதி என்ற பெயர்தான் சூட்டப்பட்டிருந்தது. நாங்கள்தான் அதை மாற்றி, அயல்நாட்டில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் என மாற்றி நிதி ஒதுக்கி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக பாராட்டு தெரிவித்தனர். மேலும் பலர் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை குறித்தும் பேசினார்கள்.

நான் நாடாளுமன்றம் சென்றபோது சோனியா காந்தி அங்கிருந்தார். எனவே அவரை சந்தித்தேன். இப்போதும் மட்டும் கிடையாது. நான் எப்போது டெல்லி வந்தாலும் அவரை சந்திப்பேன். அதுமட்டுமல்ல வரும் ஏப்.2-ம் தேதி திமுக அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் சோனியா காந்தியும, ராகுல் காந்தியும் வருவாதக கூறியிருக்கின்றனர். அங்கும் அவர்களை நான் சந்திப்பேன்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்