திருப்பத்தூர் பயங்கரம் | லாரி மீது வேன் மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு;  27 பேர் படுகாயம்

By ந.சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே தேசிய நெடுசாலையில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன், ஒட்டுநரின் கட்டுப்பட்டை இழந்து மறுபுறம் எதிரே வந்த லாரி மீது மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த 27 பெண்கள் படுகாயமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம் கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் 1,500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் பெண்களை அழைத்து வர தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளுக்கு செல்லும் தொழிற்சாலை வேன் பல்வேறு இடங்களில் இருந்து தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களை அழைத்து வருவது வழக்கம். அதன்படி, வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் இருந்து 30 பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஆம்பூர் நோக்கி வேன் இன்று காலை புறப்பட்டது.

ஆம்பூர் அடுத்த வடச்சேரி பகுதியைச் சேர்ந்த ராமன் (36) என்பவர் வேனை ஓட்டி வந்தார். அப்போது, ஆம்பூர் வட்டம் சோலூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேன் வேகமாக வந்துக்கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிக்கெட்டு ஓடி அங்குள்ள தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு எதிர்திசையில் பாய்ந்தது.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூருக்கு சுண்ணாம்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேன் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. வேன் ஓட்டுநர் ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேன் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நெக்குந்தி பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பவுனம்மாள் (30), பூர்ணிமா (19) ஆகியோரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். வேனில் பயணித்த அனைத்து பெண்களும் காயமடைந்தனர்.

உடனடியாக சாலையின் சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய பெண்களை ஒவ்வொருவராக மீட்டனர். மேலும் விபத்து குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் கிராமிய காவல் துறையினர், போக்குவரத்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

20-க்கும் அதிகமானோர் காயமடைந்து இருந்ததால் ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் டிப்பர் லாரியில் காயமடைந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனை முன்பாக குவிந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த 13 பெண்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் உயிரிழந்த ராமன், பவுனம்மாள், பூர்ணிமா ஆகிய 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கோர விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்து காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வேன் சாலையில் இருந்த அகற்றப்பட்டு, ஒரு மணி நேரத்தில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 13 பெண்களின் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.

ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பெண்களை தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்ல வேன் மற்றும் பேருந்து வசதிகள் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. இதில்,பெரும்பாலான தொழிற்சாலைகளில் குறைந்த அளவிலான ஆட்களை ஏற்றக்கூடிய மினி வேனில் அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏற்றுவதால் கோர விபத்து சம்பவங்கள் நிகழ்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆம்பூர் அருகே இன்று நடந்த விபத்தில் 15 பேர் அமரக்கூடிய வேனில் 30 பெண்களை ஏற்றிக்கொண்டு அதிவேகத்துடன் வேன் வந்தததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளாகி 3 பேரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. எனவே, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து காவலர்கள், தினமும் ஆய்வு நடத்தி அதிக பாரத்துடன் வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கை வேண்டும்.

தற்போது ஏற்பட்ட விபத்துக்கு முழு பொறுப்பேற்று சம்மந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகமே, உயிரிழந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதேநேரத்தில் எதிர்காலத்தில் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்புக்கு தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE